மாநகர போலீஸ் எல்லைக்குள் மங்கலம் இணைய தாமதம் ஏன்?
திருப்பூர்: மாவட்ட கட்டுப்பாட்டில் இருந்த மங்கலம் போலீஸ் ஸ்டேஷன், திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் இணையும் என, அறிவிப்பு வெளியாகி, ஒன்றரை ஆண்டாகியும் இன்னும் அரசாணை வெளியிடப்படாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம் கடந்த, 2013ம் ஆண்டு உதயமானது. கடந்த 2023 ஏப்., மாதம் சட்டசபையில் நடந்த போலீஸ்துறை மானிய கோரிக்கையில், திருப்பூர் மாவட்ட போலீசின் கீழ் உள்ள, மங்கலம் போலீஸ் ஸ்டேஷனை, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகத்துடன் இணைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அந்த ஸ்டேஷன் கீழ், மங்கலம், இடுவாய், பூமலுார், 63 வேலம்பாளையம், இச்சிபட்டி என, ஐந்து ஊராட்சி, சாமளாபுரம் பேரூராட்சி இடம் பெற்றுள்ளன. இவற்றில், ஆறு தாய் கிராமங்கள், 34 குக்கிராமங்கள் உள்ளன. அறிவிப்பு வெளியாகி, ஒன்றரை ஆண்டை கடந்தும், இதுவரை மங்கலம் போலீஸ் ஸ்டேஷன், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் இணையாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''மாநகர போலீசில், மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் இணைவது தொடர்பாக உத்தரவு வெளியான பின், இதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசாணைக்காக காத்திருக்கிறோம். அங்கிருந்து முறைப்படி அரசாணை வெளியான பின்னரே, மற்ற பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்றனர்.