அறுசுவையிலும் சிறந்தது நகைச்சுவை!
இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவையை காட்டிலும், அளவிட முடியாத இன்பம் அளிப்பதுதான், ஏழாவது சுவையாகிய நகைச்சுவை. நமது முன்னோர்கள், நகைப்பும் வாழ்வில் மிக முக்கியம்; அதையும் ரசித்து ருசித்து மகிழலாம் என்பதால்தான், அதற்கு நகைச்சுவை என்று பெயர் வைத்தனர்.
இயந்திரமாகி வரும் வேகமாக மனித வாழ்வில், நகைச்சுவை உணர்வு என்பது நோய் தீர்க்கும் மாமருந்து. கனத்துப்போன மனங்களுக்கு மருந்திடும் மருத்துவராக, நகைச்சுவை காக்கும் என்கிறது, திருப்பூர் நகைச்சுவை அரங்கம்.
நகைச்சுவை மன்றம் என்பது, பனியன் தொழில் நகரின் மற்றுமொரு அடையாளமாக இருந்தது. தொடர்ச்சியாக, 140 நிகழ்ச்சிகளை நடத்தி, நகைச்சுவை உணர்வை வளர்த்திருந்தது; நகைச்சுவை ஆர்வலர்கள் முயற்சித்து, தற்போது திருப்பூர் நகைச்சுவை அரங்கம் என்ற பெயரில் மீண்டும் துவக்கியிருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும், முதல் அல்லது இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணிக்கு, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நகைச்சுவை அரங்கு, ஆயிரக்கணக்கான மக்களை, குடும்ப சகிதமாக ஆஜராக செய்கிறது.
தொழில், வர்த்தகம், லாபம் என்ற வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து, நம்மை ஆற்றுப்படுத்தும் அந்த இரண்டு மணி நேரங்களை, ஏராளமான திருப்பூர் மக்கள் காத்திருந்து, வயிறு குலுங்க சிரித்தே அனுபவிப்பதை நேரில் பார்க்க முடிகிறது.
சிரிப்பு ஒன்றே சிறப்பானது என்று பயிற்றுவித்து வரும் சிரிப்பானந்தா கடந்த வாரம், திருப்பூரில் ஆஜராகியிருந்தார். ''ம்..ம்.. அ...ஆ...' என்று கூறியபடியும், காகம் போல் கைகளை விரித்து பறப்பது போல், அங்கிருந்த 2000 பேரும், துள்ளி குதித்து சிரித்து மகிழ்ந்ததை மறக்கவே முடியாது! நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே, இறுக்கமாக அமர்ந்திருந்த வயது முதிர்ந்தவர்களும் கூட, எழுந்து நின்று கையை அசைத்தபடி சிரித்தது, அவர்கள் மன இருக்கம் தளர்ந்து லேசாகிவிட்டதை உணர முடிந்தது! சிரிப்பும், நகைச்சுவையும் மனிதர்களுக்கு மட்டுமே இறைவன் வழங்கிய சொத்து; அதை அனைவரும் அனுபவித்து வாழ வேண்டும்!