கொட்டிக்கிடக்கும் தனியார் துறை வேலை இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வம்
லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் சூழலில், அரசு வேலையே கிடைக்காமல், காத்திருந்து காத்திருந்து காலங்களை இழந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அதே வேலை வாய்ப்பு அலுவலகங்கள் இன்று, தங்களின் நிலைபாட்டில் இருந்து மாறுபட துவங்கியிருக்கின்றன. அதுவும், திருப்பூரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் பயிற்சி மையம் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன், அரசுப்பணிக்கான போட்டி தேர்வுக்கு மாணவ, மாணவியரை அசத்தலாக தயார்படுத்தி வருகின்றனர். அரசுப்பணி மட்டுமின்றி, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கும் சூழலில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 21 தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, நேர்க்காணல் நடத்தின. 166 பேர் வேலை தேடி முகாமில் பங்கேற்றனர். இவர்களில், 48 பேர் பணிக்கு தேர்வாகினர். 12 பேர், தேர்வு பட்டியலில் வைக்கப்பட்டனர். முகாமில் பங்கேற்ற, 8 மாற்றத்திறனாளிகளில், 5 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்.''தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கெடுக்க இளைஞர், இளம் பெண்கள் மத்தியில், ஆர்வம் அதிகரித்து வருகிறது,'' என்கிறார், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார்.---
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில், வேலை தேடி பங்கேற்ற, 166 பேரில், 114 பேர் பெண்கள் என்பது, குறிப்பிடத்தக்கது. ஆண்கள், 52 பேர் மட்டுமே பங்கெடுத்துள்ளனர். வேலை வாய்ப்பு ஆணை பெற்ற 48 பேரில், 35 பேர் பெண்கள்; 13 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.