விரல் நுனியில் வானிலை தகவல்

அறிவியலின் அசாத்திய வளர்ச்சியின் விளைவாக, அன்றாட வானிலை நிலவரத்தை, கையடக்க அலைபேசி வாயிலாக அறிந்து கொள்ளும் வசதியும், வாய்ப்பும் வந்துவிட்டது.

மாநில அரசின் 'டி.என்., -செயலி' வாயிலாக, அடுத்தடுத்த நாட்களுக்கான வானிலை நிலவரத்தை அறிந்து, புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மிக எளிய முறையில் இயங்கும் இச்செயலியில், நம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அறிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியில் அடுத்த, 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழையளவு, நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்துக்கு உட்பட்டதா என்பது போன்ற தகவல்களை அறியும் வசதி உள்ளது.

இடி, மின்னலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள்; அதில் தாக்காமல் இருப்பதற்கான யோசனை உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள், தங்கள் புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

சாமானிய மக்கள் கூட மொபைல்போன்களை பயன்படுத்தும் நிலையில், வானிலை பாடமும் கைக்குள் வந்துவிட்டது.

தங்கள் பகுதியில் பேரிடர் பாதிப்பு ஏற்படும் இடங்கள் அனைத்தும் அடையாளம் காட்டப்படும் நிலையில், அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முன்கூட்டியே உஷாராகக் கூடிய சூழ்நிலையையும் வானிலை செயலி உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை சவுகரியம் கிடைத்தும், பொது மக்களும், அரசு இயந்திரங்களும், இனியும், மழைக்கால பாதிப்புகளை பட்டியலிடுவது, மெத்தனத்தின் எதிரொலி என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement