மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; பா.ஜ., அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது என்.பி.பி.

3


இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவி வரும் நிலையில், பா.ஜ., தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி (NPP) அறிவித்துள்ளது.


மணிப்பூர் மாநிலம், ஜிரிபம் மாவட்டத்தில் காணாமல் போன 6 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது- அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இம்பால் மேற்கு மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இணையதள சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.


இந்த நிலையில், மணிப்பூரில் பா.ஜ., தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளை தீர்க்கவும், மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டு வரவும், பைரேன் சிங் தலைமையிலான அரசு தவறி விட்டதாகவும், இதனைக் கண்டித்து பா.ஜ., அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தேசிய மக்கள் கட்சி விளக்கம் கொடுத்துள்ளது.


60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் தேசிய மக்கள் கட்சி 9 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டுள்ளது. கடந்த 2023ல் 2 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட குகி மக்கள் கூட்டணி, பா.ஜ., அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. இதுவரையில் 9 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை வாபஸ் பெற்றாலும், பா.ஜ., கூட்டணி அரசு 32 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது.


பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் 6 எம்.எல்.ஏ.,க்களையும், நாகா மக்கள் முன்னணி கட்சி 5 எம்.எல்.ஏ.,க்களையும் கொண்டுள்ளது. அதுபோக, 3 சுயேட்சை வேட்பாளர்கள் பா.ஜ., அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


காங்., கண்டனம்





என்.பி.பி., ஆதரவை வாபஸ் வாங்கியது குறித்து பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, "மணிப்பூரில் பொறுப்பு இல்லாத ஆட்சி நடக்கிறது. நீதி கிடைக்க வேண்டும். இதுவரையில் பிரதமர் மோடி மணிப்பூருக்கு நேரில் சென்று பார்வையிட வில்லை. அம்மாநில மக்கள் பல மாதங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல நாடுகளுக்கும், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் முழுவதும் சுற்றும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை. ராகுல் மணிப்பூர் சென்று வந்துள்ளார். பிரதமர் மோடி எங்கே? மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement