காங்., கட்டமைப்பை சீரமைக்க பொறுப்பாளர்கள் நியமனம்
சென்னை: கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கமிட்டி அமைக்க, பொறுப்பாளர்களை நியமித்து, அக்கட்சியின் தமிழக அமைப்பு செயலர் ராம்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக காங்.,கின் அடிப்படை கட்டமைப்பை, கிராம வார்டுகள் முதல், அனைத்து நிலைகளிலும் மறுசீரமைத்து, பலப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கும், கட்சிக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, கட்சியின் சித்தாந்தங்கள், கொள்கைகள், இளைய தலைமுறைக்கு உணர்த்தப்பட உள்ளன. இதற்காக கிராம கமிட்டிகளை, முழுமையாக கட்டமைக்கும் பணியை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முன்மாதிரி முயற்சியாக, சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் இப்பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து, அடுத்த 15 நாட்களுக்குள், அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் இணைந்து, கிராம காங்கிரஸ் கமிட்டிகள் மறு சீரமைக்கப்படும். இதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.கட்சியில் இருந்து மன சோர்வினாலும், கருத்து வேறுபாடுகளாலும், விலகி சென்றவர்களை, மீண்டும் கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபடச் செய்ய வேண்டியது, இந்த குழுவின் கடமை.
புதிதாக உருவாக்கும் கிராம கமிட்டியில், இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் அதிக அளவில் இடம்பெற செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.