'ஹைப்பர்சானிக்' ஏவுகணை சோதனை வெற்றி
புதுடில்லி: தொலைதுாரம் சென்று தாக்கக்கூடிய, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக, 'ஹைப்பர்சானிக்' ஏவுகணை சோதனை ஒடிசா கடல் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
ஹைப்பர்சானிக் ஏவுகணைகள், வழக்கமான வெடிபொருட்கள் அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடையவை. இவை, பொதுவாக மணிக்கு 1,220 கி.மீ., வேகத்தில் பறக்கும்.
இதைவிட அதிவேகமாக பறக்கும் திறன் உடைய ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் வைத்து, முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே ஹைப்பர்சானிக் ஏவுகணையை, தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணையின் செயல்திறன், ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, மணிக்கு 1,500 கி.மீ., வேகத்தில் பறந்து, தொலைதுார இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் திறன் உடையது.
இந்த வெற்றிகரமான சோதனையை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெகுவாக பாராட்டினார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்த வெற்றியின் வாயிலாக இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
'இது ஒரு வரலாற்று சாதனை. இதன் வாயிலாக, இதுபோன்ற அதிநவீன ராணுவ தொழில்நுட்பங்களை உடைய நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.