திருப்பாச்சேத்தியில் குண்டும் குழியுமான தார் ரோடு விவசாயிகள் அவதி
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அருகே பல ஆண்டாக பராமரிப்பின்றி கிடக்கும் தார் ரோட்டால் விவசாயிகள் விளைவித்த பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருப்பாச்சேத்தி தெற்கு பகுதியில் 4-00 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட ஏராளமான விவசாயம் நடந்து வருகிறது.
பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாய பணிகள் நடக்கிறது. விவசாய நிலங்களின் ஒரு பகுதியில் மதுரை -- ராமேஸ்வரம் அகல ரயில் பாதை செல்வதால் தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் போடப்பட்ட தார் ரோட்டை நம்பியே விவசாயிகள் உள்ளனர்.
தொடர்ந்து இந்த ரோட்டை பராமரிக்காமல் விட்டதால், குண்டும் குழியுமாக நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளது.
டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாததால் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள், தலைசுமையாக எடுத்து செல்கின்றனர்.
ஆவரங்காடு செல்லும் பாதையில் இருந்து பிரிந்து பிச்சைப்பிள்ளையேந்தல் வரை செல்லும் 2.5 கி.மீ., துார ரோட்டின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இது குறித்து விவசாயி ராசு கூறியதாவது: இந்தரோடு வழியாக பிச்சைபிள்ளையேந்தல், தாழிக்குளம், மாரநாடு, பழையனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கும் செல்லலாம்.
தார் ரோட்டின் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் குண்டும் குழியுமான ரோட்டில்பயணிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், என்றார்.