இயந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் சாகுபடி செய்த நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுாரில் கால்வாய் பாசன வசதிபெறும் பகுதிகளில் விவசாயிகள் குறுகிய கால நெல் ரகங்களை நடவு செய்தனர். தற்போது விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் விளைச்சல் பாதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 40 முதல் 45 மூடை கிடைத்தது. தற்போது மகசூல் குறைந்து 20 முதல் 25 மூடை மட்டுமே கிடைத்துள்ளது. இதில் கிணற்று பாசனத்தில் முன்கூட்டியே நடவு செய்த விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். கால்வாய் பாசனத்தில் நடவு செய்து அறுவடை முடித்துள்ள விவசாயிகள் மழையால் மகசூல் பாதித்து வேதனை அடைந்துள்ளனர். மேலும் வியாபாரிகள் நெல்லை வாங்க தயங்குவதாகவும், குறைந்த விலைக்கு வாங்கி செல்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement