ஐப்பசியில் போதிய மழையின்றி விவசாயிகள்... கவலை; கார்த்திகை கை கொடுக்குமா என எதிர்பார்ப்பு
செஞ்சி: செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் இதுவரை போதிய அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யாததால் ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விவசாயம் சார்ந்த செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் உள்ள ஏரி, குளங்கள் வடகிழக்கு பருவமழையை நம்பியே உள்ளன. ஏரி, குளங்கள் நிறைந்தால் மட்டுமே விவசாய கிணறுகளிலும் தண்ணீர் இருக்கும். வழக்கமாக வடகிழக்கு பருவமழை தமிழ் மாத கணக்கின்படி ஐப்பசியில் துவங்கும்.
ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை வரும். இதற்கு முன்னதாக தீபாவளி மூட்டம் என விவசாயிகள் குறிப்பிடும் அடைமழை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும். இந்த கால கட்டத்தில் ஏரி, குளங்கள் பெருமளவு நிறைந்து விடும்.
கடந்த ஆண்டு செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்களில் ஐப்பசி மாதத்தில் மட்டுமின்றி வடகிழக்கு பருவமழை காலம் முழுதும் போதிய அளவில் மழை பெய்யவில்லை.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை குறைவாகவே பெய்துள்ளது.
அதிலும் இந்த ஆண்டும் செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்களில் தற்போது வரை மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது. அடை மழை காலம் எனப்படும் ஐப்பசி முடிந்த நிலையில் செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் உள்ள ஏரிகள் 10 முதல் 20 சதவீதம் மட்டும் தண்ணீர் உள்ளது.
இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள் முழு அளவில் சம்பா சாகுபடி செய்யாமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. கார்த்திகை மாதத்தில் கடும் மழை இருக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு முன்னதாக கனமழை பெய்யும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் கார்த்திகை மாதம் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.