குறிச்சி கண்மாய் கால்வாய் துார்வாரி வைகை தண்ணீர் எடுத்து சென்ற மக்கள்
இளையான்குடி : இளையான்குடி அருகே குறிச்சி கண்மாய்க்கு வைகை நீர்செல்லும் கால்வாயை கிராம மக்களே சொந்த செலவில் சீரமைத்து, தண்ணீர் கொண்டு சென்றனர்.
இளையான்குடி அருகே குறிச்சி, முஷ்டகுறிச்சி கிராம கண்மாய்கள் மூலம் 800 ஏக்கரில் நெல், வாழை, மிளகாய் சாகுபடி செய்கின்றனர்.
இக்கண்மாய்க்கு பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து இடது பிரதான கால்வாய் மூலம் வைகை தண்ணீர் நெட்டூர், கருங்கண்ணியேந்தல் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயிலிருந்து பிரிந்து குறிச்சி, முஷ்ட குறிச்சி கண்மாய்க்கு செல்வது வழக்கம். கடந்த 5 ஆண்டாக இக்கால்வாய் துார் வாரப்படாததால், கால்வாய்கள் மேடாகி தண்ணீர் வராமல் இருந்தது. இதனால், இக்கிராமத்தில் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. இக்கால்வாயை துார்வார வேண்டுமென்று அதிகாரிகளிடம் பலமுறை கிராமத்தினர் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதால் குறிச்சி, முஷ்டகுறிச்சி கிராம மக்கள் தங்களது சொந்த செலவிலேயே கால்வாயை தூர்வாரி வைகை ஆற்று நீரை கிராம கண்மாய்களுக்கு எடுத்து சென்றுள்ளனர்.