உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள்
சாலையோரம் மண்குவியல்
கணபதி, இ.பி., காலனி பகுதியில் குழாய் பதிப்பிற்காக சாலையை தோண்டி மண்ணை சாலையோரம் குவித்தனர். பணிகள் முடிந்த பின், பல மாதங்கள் ஆகியும் மண்ணை அகற்றவில்லை. சாலையில் நடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும் மிகவும் சிரமமாக உள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- ரேணுகாதேவி, கணபதி.
விளக்குகளை சரிசெய்யணும்
கோவைப்புதுார், அலுமு நகர், இரண்டாவது வீதியில், கடந்த 20 நாட்களுக்கு மேலாக சில கம்பங்களில் தெருவிளக்கு எரியவில்லை. இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் பாதிப்படைகின்றனர். பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் பழுதான விளக்குகளை சரிசெய்து தர வேண்டும்.
- சுசீலா, கோவைப்புதுார்.
சேற்றில் சிக்கும் வாகனங்கள்
கோவை மாநகராட்சி ஒன்றாவது வார்டு, ஜான் போஸ்கோ நகரில் தார் சாலை வசதியில்லை. மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. வானங்களின் சக்கரங்கள் சேற்றில் மாட்டிக்கொள்கின்றன. நடந்து செல்வோர் வழுக்கி விழுகின்றனர். தார் சாலை அமைப்பதே நிரந்தர தீர்வாகும்.
- அனுராதா, துடியலுார்.
சறுக்கும் வாகனஓட்டிகள்
மதுக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாலங்களில் மண் அதிகளவில் சேர்ந்துள்ளது. இதனால், மழைநீர் தேங்கி நிற்பதால் பாலங்கள் சேதமாக வாய்ப்புள்ளது. மேலும், சாலையோரம் உள்ள மணலால், இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்தில் சிக்குகின்றனர்.
- சிவராமன், மதுக்கரை.
கடும் இருளால் பாதுகாப்பில்லை
ஜி.என்.,மில்ஸ் பகுதியில், எஸ்.எம்.ஆர்., லேஅவுட் பகுதியில், கம்பம் எண் 'எஸ்.பி -2, பி-39', கடந்த 15 நாட்களுக்கு மேலாக, தெருவிளக்கு எரியவில்லை. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் இருள் சூழ்ந்துள்ளது. இரவு நேரங்களில் வெளியில் வரவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- கீர்த்திகா, ஜி.என்.,மில்ஸ்.
இருள்சூழ்ந்த பூங்கா
நாவாவூர் பிரிவு, கியூரியா கார்டன் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் தெருவிளக்குகள் அனைத்தும் பழுதாகியுள்ளது. இதனால், மாலை நேரம் விளையாட செல்லும் சிறுவர்கள், நடைப்பயிற்சி செல்வோர் பாதிப்படைகின்றனர். பூங்காவிற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.
- மனோகரன், கியூரியா கார்டன்.
உயிருக்கு பாதுகாப்பில்லை
சிட்ரா, 55வது வார்டு, ஏ.ஆர்.எஸ்., மஹால் அருகே, சாலையின் ஒருபுறம் குழாய் பதிக்க குழி தோண்டியுள்ளனர். மறுபுறம் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது. மோசமான சாலையில் தினமும் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சென்று வருகிறோம். அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விரைந்து பணிகளை முடித்து சாலையை சீர்செய்ய வேண்டும்.
- ராபர்ட், சிட்ரா.
வேகத்தடை வேண்டும்
தொண்டாமுத்துார் ரோடு மற்றும் கியூரியோ கார்டன் ரோடு சந்திக்கும் இடத்தில் வளைவில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. பிரதான சாலையில் அதிவேகத்தில் வாகனங்கள் வருவதே இதற்கு காரணம். விபத்துகளை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- முத்துக்குமார்,
வடவள்ளி.
நிழற்குடை வசதியில்லை
திருச்சி ரோடு, சவுரிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதியில்லை. முதியவர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் மழை, வெயிலில் வாடுகின்றனர். பயணிகள் வசதிக்காக நிழற்குடை வசதி அமைத்து தர வேண்டும்.
- ராஜா, சவுரிபாளையம்.
தார் சாலை அமைக்கணும்
விளங்குறிச்சி, 22வது வார்டில், உதயா நகரில், ஜீவா நகர், ஜானகி நகர், வெங்கடாசலபதி நகர் போன்ற குடியிருப்பு பகுதிகள் உள்ளது.பல வருடங்கள் ஆன தார் சாலை குண்டும், குழியுமாக மோசமாக சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் சாலையை பயன்படுத்தவே முடியவில்லை. விரைந்து புதிய தார் சாலை வசதி அமைக்க வேண்டும்.
- பாலமணிகண்டன், விாளங்குறிச்சி.
புகார் செய்தும் பலனில்லை
சிங்காநல்லுார், ஐயர் லேஅவுட், 'எஸ்.பி -8, பி -6' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த 20 நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. தெருவிளக்கு பழுது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- மயில்சாமி, சிங்காநல்லுார்.
குப்பையான பூங்கா
தண்ணீர் பந்தல், கணேஷ் நகர் பூங்காவில் குழந்தைகள் அதிகளவில் மாலையில் வந்து விளையாடுகின்றனர். ஆனால், பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. பூங்கா முழுவதும் குப்பையாக தேங்கியுள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தி அதிகளவில் உள்ளது.
- பிரியா, தண்ணீர் பந்தல்.