வைகை ஆற்றிற்குள் குப்பையை குவிக்கும் உள்ளாட்சி நிர்வாகம்

திருப்புவனம் : திருப்புவனம் பகுதி வைகை ஆற்றினுள் உள்ளாட்சி அமைப்புகள் பலவும் குப்பைகள், கழிவுகளை தொடர்ச்சியாக கொட்டி மாசுபடுத்தி வருவதுடன் வைகை ஆற்றையும் ஆக்கிரமித்து வருகின்றன.

திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30,000 பேர் வசிக்கின்றனர். இதுதவிர அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளன. தினமும் 6 டன் குப்பைகள் சேகரமாகிறது. முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் இரு மடங்கு குப்பை சேகரமாகும்.

துாய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை கிடங்குகளில் தரம் பிரித்து அழிக்க வேண்டும். ஆனால் குப்பை கிடங்கில் 15 அடி உயரத்திற்கு குப்பைகள் தரம் பிரிக்காமல் குவித்து வைத்துள்ளதால் குப்பைகள் கொட்ட இடமின்றி, செல்லப்பனேந்தல் விலக்கு, திதி பொட்டல், பைபாஸ் ரோடு, வலையனேந்தல் கண்மாய், பழையனூர் கால்வாய் பகுதிகளில் குப்பைகளை கொட்டி நீர்நிலைகளை மாசுபடுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி மடப்புரம் உட்பட வைகை ஆற்றை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளும் குப்பைகளை வைகை ஆற்றிலேயே கொட்டி வருகின்றனர்.

இது குறித்து செயல் அலுவலர் சங்கர் கணேஷ் கூறியதாவது: குப்பைகளை கிடங்கில்தான் கொட்ட வேண்டும் என கூறியுள்ளேன். குப்பைகளை கொட்டுவதற்கு இட பற்றாக்குறை உள்ளது, என்றார்.

Advertisement