சிட்டி கிரைம்...
ம.தி.மு.க., அலுவலகத்தை இடித்தவர்கள் மீது வழக்கு
கோவை ஆவாரம்பாளையம் முருகன் கோவில் வீதியில் கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க., அலுவலகம், முத்தமிழ் படிப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடத்தை கடந்த, 15ம் தேதி இரவு பொக்லைன் இயந்திரத்தை வைத்து இடித்து சென்றனர். இதுகுறித்து அறிந்ததும் அங்கு ம.தி.மு.க.,வினர் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து பீளமேடு செயலாளர் வெள்ளியங்கிரி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரில் அலுவலக கட்டடத்தை இடித்ததால் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் மேஜை, நாற்காலிகள், மின்விசிறிகள் சேதம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து போலீசார் கட்டடத்தை இடித்த சுந்தர்ராஜன், 56, அவரது மகன் கோகுல்ராஜ், 37, செந்தில்குமார், 39 கோபாலகிருஷ்ணன், 40 ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.--
தவறி விழுந்து வாலிபர் பலி
கோவை அன்னுார் பூலுவபாளையத்தை சேர்ந்தவர் பிரதாப், 30. இவர் ஏ.சி., மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் விளாங்குறிச்சி ரோடு காந்தி வீதியில் உள்ள தினேஷ் என்பவரது வீட்டில் முதல் தளத்தில் ஸ்லாப்பில் நின்றபடி ஏ.சி., பழுது பார்த்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அங்கிருந்து தவறி கீழே விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பிரதாப்பை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி ஜனனி புகாரின் படி பீளமேடு போலீசார் வீட்டின் உரிமையாளர் தினேஷ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வியாபாரியை தாக்கிய இருவர் கைது
கோவை டாடாபாத் பவர் ஹவுசை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 41. பால்கோவா தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறார். இதேபோல், கோவையில் இருந்து வெளியூருக்கு சில நாட்களுக்கு முன் டிராவல்சில் பால்கோவாவை அனுப்பி வைத்தார். ஆனால் அது செல்ல தாமதமாகி விட்டது. நேற்று முன்தினம் ஸ்ரீகாந்த் தனது நண்பர் ஒருவருடன் சித்தாபுதுார் தனலட்சுமி நகரில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்துக்கு சென்று தாமதம் குறித்து கேட்டார். இதனால் டிராவல்ஸ் உரிமையாளருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டிராவல்ஸ் உரிமையாளர் லிங்கராஜன், 32 மற்றும் டிரைவர் பிரவீஸ்குமார், 23, ஆகியோர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர் பரத்தை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இது குறித்து ஸ்ரீகாந்த் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து டிராவல்ஸ் உரிமையாளர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லிங்கராஜன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரவீஸ் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இதேபோல, பரத் மற்றும் ஸ்ரீகாந்த் தனது கணவர் லிங்கராஜனை தாக்கி மிரட்டியதாக அவரது மனைவி விஜிதா புகார் அளித்தார். அதன்பேரில், பரத், ஸ்ரீகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்ற மூவர் கைது
கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் குட்கா விற்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த கடையில் இருந்த 3 கிலோ 662 கிராம் குட்கவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழங்கு பதிந்து கரும்புகடையை சேர்ந்த அமர் அலி, 38 மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த நுார், 20 ஆகியோரை கைது செய்தனர். அதேபோல ரத்தினபுரி போலீசார் குட்கா பதுக்கி வைத்து விற்ற டாடாபாத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன், 62, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 131 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் மதுபாட்டில்கள் கடத்தல்; இருவர் கைது
சூலூர் போலீஸ்காரர் செந்தில் முருகன் , பாப்பம்பட்டி பிரிவில் ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த காருக்கு அருகில் சென்றார். அவரை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் காரை வேகமாக ஓட்டினர். துரத்தி சென்ற செந்தில் முருகன், கண்ணம் பாளையம் பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் காரை மடக்கி பிடித்தார். காரை சோதனை செய்ததில், 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது தெரிந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்த மகேஷ்வரன், 35, நத்தத்தை சேர்ந்த லட்சுமணன்,21 என்பது தெரிந்தது. இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பது தெரிந்தது. கார் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.