குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய எதிர்பார்ப்பு; நீரினால் நோய்கள் பரவ வாய்ப்பு
வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருவதால் நீர் மூலம் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 450 ஊராட்சிகள் உள்ளன. குடிநீர் சப்ளை செய்ய ஆங்காங்கே மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டன. பெரும்பாலான உள்ளாட்சிகளில் 20, 30 ஆண்டுகள் கடந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன. சில இடங்களில் துாண்கள் சேதம் அடைந்து, கம்பிகள் துருப்பிடித்து, நீர் கசிவு ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பெரும்பாலான ஊர்களில் இட வசதி இல்லாததால், பள்ளிக்கூடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஊருக்குள் நுழையும் இடங்களில் தொட்டிகள் உள்ளதால் விபத்து அச்சம் உள்ளது. அது மட்டுமல்ல நீண்ட நாட்களாக தொட்டிகளை சுத்தம் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். கசிவுகளால் தொட்டிகளில் பாசி படர்ந்து காணப்படுகின்றன. தொட்டிகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நாய், பன்றிகள் கிளறுகின்றன. இதில் உண்டாகும் புழு பூச்சிகள் குழாய்களில் நுழைந்து குடிநீரில் கலந்து விடுகிறது.
வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் மேல்நிலைத் தொட்டிகளுக்கு கீழ் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. இதிலிருந்து உருவாகும் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. குடிநீரில் லார்வா புழுக்கள் கலந்து, சுகாதாரமற்ற குடிநீரை சப்ளை செய்வதால், நீரின் மூலம் நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
தொட்டிகளில் எப்போது துாய்மை பணிகள் செய்யப்பட்டதை என்பதை அறிவிப்பு பலகைகளில் தேதி உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டும். பெரும்பாலான உள்ளாட்சிகளில் இது போன்ற தகவல்களை எழுதி வைப்பது கிடையாது.
இதை தடுத்து, பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உள்ளது. சேதமடைந்த தொட்டிகளை சீரமைத்து, தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தி, பாசி படர்ந்த தொட்டிகளில் ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனை பின்பற்ற உள்ளாட்சி நிர்வாகங்களை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.