மூன்றாவது வாரமாக'துள்ளிய' மீன் விற்பனை
திருப்பூர் ; திருப்பூர் மீன் மார்க்கெட்டில் மூன்றாவது வாரமாக நேற்றும், கூட்டம் அதிகரித்தது. மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர்.
தீபாவளி முடிந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில், தென்னம்பாளையம், மீன் மார்க்கெட்டில் கூட்டம் குறையாமல் அதிகரித்து வந்தது. கார்த்திகை மாத பிறப்பால் நேற்று கூட்டம் குறைவாகுமென வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றும் அதிகாலை முதலே கூட்டம் அதிகரித்தது.
கடல், அணை மீன்கள் வரத்து, 60 டன்னாக இருந்த நிலையில், காலை, 10:00 மணிக்குள், 40 டன் மீன்கள் விற்றுத்தீர்ந்தன. சுப முகூர்த்த தினம் என்பதால், அதன் பின் விற்பனை சற்று குறைந்தது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்கள் அளவுக்கு நேற்றும் கூட்டம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மீன் மார்க்கெட் செல்லும் பாதை மழையால் சேறும், சகதியுமாக உள்ளது. சில இடங்களில் முழுதும் மழைநீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் செல்ல முடியுமே தவிர, பாதசாரிகள் நடந்து மீன் மார்க்கெட்டுக்கு வர முடியாத நிலை உள்ளது.
இதனால், பலர் மீன் மார்க்கெட்டுக்குள் வர தயங்கி, அப்படியே திரும்பி சென்று விடுகின்றனர். ''மாநகராட்சி மூலம் மழைநீர் அகற்றுவதுடன், விடுமுறை தினமாக ஞாயிற்றுக்கிழமை வாடிக்கையாளர் வந்து செல்ல ஏதுவாக மண் கொட்ட வேண்டும்'' என்கின்றனர், வியாபாரிகள்.