கட்சி நிர்வாகி மிரட்டல்; வணிகர்கள் மனு
பல்லடம்; தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பல்லடம் வட்டார தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் கணேசன், பொருளாளர் அசோகன், ஆலோசகர் அண்ணாதுரை உள்ளிட்டோர், கலெக்டரிடம் அளித்த மனு:பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு வணிக வளாகத்தில், வாகன பார்க்கிங் வசதி இல்லை என்பதை குறிப்பிட்டு, பல்லடம் நகராட்சிக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் மனு அனுப்பியுள்ளார்.
புகார் மனு குறித்து, நேரடியாக விசாரிக்காமல், அரசியல் கட்சி நிர்வாகியை சமாதானம் செய்து பேசி கொண்டு வாருங்கள் என, நகராட்சி மூலம் பதில் வழங்கப்பட்டுள்ளது. அவரை நேரடியாக சந்தித்து பேசிய போது, 15 லட்சம் ரூபாய் கொடுத்தால் பிரச்னையை முடித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆதாரங்களை திரட்டும் நோக்கில், இதன் உரிமையாளர் சுந்தர்ராஜ், ''2 லட்சம் ரூபாய் தருகிறேன்; முன் பணமாக, 20 ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள்'' என்றும் கூறி, பணத்தை கொடுத்துள்ளார். இவை அனைத்தும், மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, வணிகரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கட்சி நிர்வாகி மீது, ஏற்கனவே பல்வேறு ஸ்டேஷன்களில் இது போன்ற மிரட்டல் புகார்கள் உள்ளன. வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.