சீரமைக்காத தெருக்களில் தேங்கிய மழை நீர்; நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

உளுந்துார்பேட்டை : மேப்புலியூரில் சீரமைக்காத தெருக்களில் தேங்கிய மழை நீரில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த மேப்புலியூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்படவில்லை.

மேலும், பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் சில தினங்களாக பெய்து வரும் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தெருக்களில் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் தெருக்களில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று தெருக்களில் தேங்கிய மழை மற்றும் கழிவுநீர் சேற்றில் நாட்டு நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement