பணியாளர்கள் பற்றாக்குறையால் உசிலம்பட்டியில் குவியும் குப்பை அலுவலகத்தை திறக்க முடியாத அவலம்
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டுகளில் குப்பையை முறையாக உரமாக்கவும், மறு சுழற்சி பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் முறையான திட்டங்கள் இல்லை. திடக்கழிவு மேலாண்மைக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உசிலம்பட்டி பேரூராட்சியாக இருந்த போது தேனி ரோட்டில் குப்பைக் கிடங்கு செயல்பட்டது. நகராட்சியாக தரம் உயர்ந்தபின் குப்பை அளவு கூடியது. 2007ல், இந்த குப்பைக் கிடங்கு பகுதியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் நகராட்சிக்கென புதிய அலுவலகம் கட்டப்பட்டது. குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற தாமதமானது. அதனால் புதிய அலுவலகம் திறக்கப்படாமலேயே குப்பைக்குள் புதைந்து கிடக்கிறது.
இந்த நிலையில் யு.வாடிப்பட்டி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பில் குப்பையை தரம் பிரித்து உரமாக்கும் திட்டத்திற்காக 5 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2017--18ல் பேரையூர் ரோட்டில் நுண்ணுரம் செயலாக்கத்திற்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் கொண்டு வந்தனர். இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தியும் 2 இடங்களிலும் குப்பையை தரம்பிரித்துக் கையாள இயந்திரங்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் உரமாக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இக்காலகட்டத்தில் குவிந்த குப்பையில் இறைச்சி, மருத்துவ கழிவுகள், ஏற்படும் தீ போன்றவை காரணமாக சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என யு.வாடிப்பட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது பேரையூர் ரோட்டில் குப்பையை கொட்டுகின்றனர். அருகில் உள்ள மின்மயான பகுதியிலும் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அந்தப்பகுதியில் உள்ள குப்பையை மேலும் குவிக்கும் பணியில்தான் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பயிற்சி பெற்ற பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.