பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் குழந்தைகள், பொதுமக்கள் அவதி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், திருநகர், பாண்டியன் நகர் பூங்காக்கள் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் குழந்தைகள் விளையாடி மகிழ முடியாமல் தவிக்கின்றனர்.
பாலாஜி நகர் பூங்காவின் ஒரு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி துவங்கியது. இதற்காக அப்பகுதியில் இருந்த விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாததால் பூங்காவுக்குள் யாரும் நுழைவதில்லை.
தற்போது பூங்காவின் ஒரு பகுதியில் கவுன்சிலர் அலுவலக கட்டடம் கட்டப்படுகிறது. பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முன்பு, பெண்கள், முதியோர் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டனர். தற்போது அதற்கு வழியின்றி தவிக்கின்றனர்.
திருநகர் பூங்காவுக்குள் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் உடைந்து கிடக்கின்றன.
சறுக்குகள் சேதம் அடைந்துள்ளதால் விளையாடும் குழந்தைகள் காயமடைகின்றனர். பூங்காவைச் சுற்றி வாக்கிங் செல்ல அமைந்துள்ள நடைமேடை முழுவதும் சேதமடைந்துள்ளது. பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
இப்பகுதிகளில் வேறு பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததால், மக்கள் இந்த பூக்காக்களையே விரும்புகின்றனர். ஆனால் அவை பயன்படுத்தும் நிலையில் இல்லை.
பாண்டியன் நகர் பூங்காவிற்குள் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீரூற்று சேதமடைந்துள்ளது. பூங்காக்களை உடனே பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.