நகராட்சி, ஒன்றிய போட்டியால் நாற்றமெடுக்கிறது வாரச்சந்தை
உசிலம்பட்டி : ''உசிலம்பட்டி நகராட்சி, ஒன்றிய நிர்வாகத்திற்கு இடையேயான போட்டியால், வாரச்சந்தை நாற்றமெடுக்கிறது'' என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உசிலம்பட்டி நகரின் மையத்தில் சந்தை உள்ளது. புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் ஆடு, மாடு, கோழி விற்பனை நடக்கிறது.
மற்ற நாட்களில் அரசியல் கூட்டம் நடைபெறும் இடமாகவும் இருந்தது.
உசிலம்பட்டி நகராட்சியாக தரம் உயர்ந்தபோது, சந்தைப் பகுதியை ஊராட்சி ஒன்றியம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
நூற்றுக்கணக்கான கடைகள் மூலம் வருமானம் பெற்றாலும், போதிய சுகாதார பணியாளர்களை நியமிக்காததால் தேங்கும் குப்பையை அகற்ற இயலவில்லை.
நகராட்சி நிர்வாகமும் குப்பை அகற்ற முன்வரவில்லை.
உசிலம்பட்டி ஒன்றிய வசம் உள்ள சந்தை திடலில் உள்ள 7 ஏக்கர் 85 சென்ட் இடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கவும், அந்த இடத்தை முழுவளர்ச்சிக்கு நகராட்சி பயன்படுத்தவும் அரசு ஆணையிட்டுள்ளது.
இருப்பினும் ஒன்றியம் சார்பில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தை திடலுக்குள் செல்லும் ரோடு புதுப்பிக்கப்படவில்லை. பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காலி இடங்களில் குப்பை, கழிவுகள் சேர்ந்து சுகாதார கேடு உருவாகிறது.
இதனால் வாரச்சந்தை கூடும் நாட்களில் நுழைவு கட்டணம் செலுத்தாமல் விவசாயிகள் போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எப்போது தீர்வு கிடைக்குமோ என பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.