'அரசியல் அராஜகம் ஒழிக' கோஷமிட்ட நடிகை கஸ்துாரி

3

சென்னை : தெலுங்கர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், ஹைதராபாதில் கைதான நடிகை கஸ்துாரி, நவ., 29ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது, 'அரசியல் அராஜகம் ஒழிக; நீதி வெல்லட்டும்' என்று கோஷமிட்டார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நவ., 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பங்கேற்று பேசினார்.

அப்போது, தெலுங்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக, சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள பப்பலக்குடா பகுதியில், சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த கஸ்துாரியை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

அவரை, பெண் போலீசார் உதவியுடன் போலீஸ் வாகனத்தில் ஏற்றி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சாலை மார்க்கமாக அழைத்து வந்தனர்.

அங்கு அவரிடம், 'யாருடைய துாண்டுதலின்படி தெலுங்கு இன பெண்கள் குறித்து அவதுாறாகப் பேசினீர்கள்' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கஸ்துாரி, 'என் பேச்சில் எவ்வித உள் நோக்கமும் இல்லை. என் பேச்சில் இடம்பெற்ற கருத்துக்களை ஏற்கனவே அரசியல் தலைவர்கள் பேசியுள்ளனர்.

'படித்து தெரிந்து கொண்ட கருத்தையே பதிவு செய்தேன். தெலுங்கர் குறித்து அவதுாறாகப் பேசவில்லை. இருந்தபோதும், சர்ச்சையான பின் என் கருத்தை திரும்பப் பெற்று விட்டேன். அதன் பின்பும், என் மீது கைது நடவடிக்கை தேவையில்லாதது' என்று பதில் அளித்துள்ளார்.

ஒரு மணி நேர விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து வரப்பட்டார். அப்போது, வலது கையை உயர்த்தி, 'அரசியல் அராஜகம் ஒழிக; நீதி வெல்லட்டடும்' என்று கோஷமிட்டார். போலீசார் அவரை, சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பின், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது கஸ்துாரி, 'நான் ஒரு சிங்கிள் மதர், சிறப்பு குழந்தையின் தாய். என்னை சிறையில் அடைக்க வேண்டாம்' என, கோரிக்கை விடுத்தார். அதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கஸ்துாரியை நீதிமன்ற காவலில் நவ.,29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மதியம் 3:30 மணியளவில், புழல் சிறையில் கஸ்துாரி அடைக்கப்பட்டார்.

Advertisement