பெண் டாக்டர் கொலை; நீதிக்காக காத்திருக்கும் பெற்றோர்; கோல்கட்டாவில் 100 பேர் சைக்கிள் பேரணி
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலை சம்பவம் நிகழ்ந்து 100 நாள் ஆன நிலையில், தற்போதும் நூதன முறையிலான போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம்பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் டாக்டர் கொல்லப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அபயா மன்ச் எனும் குழுவின் சமூக ஆர்வலர்கள் சார்பில், 100 பேர் கொண்ட சைக்கிள் பேரணி நடந்தது. இதில், 100 டார்ச்சுகளை ஏந்தியவாறும் பேரணியில் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியை டாக்டரின் பெற்றோர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி, ஆர்.ஜி. கர் மருத்துவமனை வழியாக, கோல்கட்டாவின் ஷியாம்பஜாரில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியின் போது, சிலர் தேசிய கொடியை ஏந்தியபடி, நீதி வேண்டும், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, 100 வினாடிகள் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்தப் பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பு பேசிய பெண் டாக்டரின் பெற்றோர்கள், "எங்களின் மகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் ஏமாறுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம். 100 நாட்கள் அல்ல, ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நாளும் நீதி கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்," எனக் கூறினர்.
பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை மீது அபயா மன்ச் குழுவினர் மற்றும் டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.