வடமாவட்டங்களில் போக்கு காட்டும் மழை : வரும் 25 முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு

1

சென்னை: மேற்கு பசிபிக்கடலில், அடுத்தடுத்து ஏற்பட்ட புயல்களின் காரணமாக, வடகிழக்கு பருவமழை காலத்தில், எதிர்பார்த்தபடி மழை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் இயல்பான ஆண்டு மழையில் பெரும்பகுதி, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெறப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், நீர் ஆதாரத்தை உறுதி செய்வதில், வடகிழக்கு பருவமழை முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், சில ஆண்டுகளாக, தென்மேற்கு பருவமழை காலத்தில், வளி மண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மழை பெறுகின்றன.

'ரெட் அலர்ட்'



வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் வறட்சியை தடுக்க, இது பேருதவியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்டோபர், 15ல் துவங்கியது.

அப்போது, வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது.

ஆனால், தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே, அப்போது அதி கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில், 30 செ.மீ., வரை மழை பதிவானது.

இதன்பின், நவம்பர், 11 முதல் 14 வரை, சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில், மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தும், எதிர்பார்த்த மழை இல்லை.

வடகிழக்கு பருவமழை தொடர்பான, அடுத்தடுத்த வானிலை கணிப்புகள் நிறைவேறாதது, மக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மத்தியில், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

தாமதமானது



இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக்கடலில் எதிர்பார்த்தபடி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரே சமயத்தில் எதிரெதிர் திசைகளில், காற்று வீசுவதில் ஏற்பட்ட மாற்றத்தால், கனமழை வாய்ப்பு தாமதமானது.

அடுத்து வரும் வாரங்களில், இந்தச் சூழல் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வங்கக்கடலில் ஏற் படும் ஒவ்வொரு மாற்றங்களையும், துல்லியமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது:

பொதுவாக மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான், வலுவான புயல்கள் ஏற்படும். இது முடிந்த பின், வடகிழக்கு பருவமழை காலத்தில், வங்கக்கடலில் புயல்கள் உருவாவதில் எந்த இடையூறும் இருக்காது.

ஆனால், இந்த ஆண்டு தாமதமாக, அக்., நவ., மாதங்களில் தான், மேற்கு பசிபிக் பெருங்கடலில் புயல்கள் உருவாகின. அந்த வகையில் தற்போது, 'மான் ஹீ' என்ற ஒரு சூப்பர் புயல் நிலவுகிறது.

இந்திய பெருங்கடலில் வலுவான சலனங்கள் உருவாகாததற்கும், பருவமழை தீவிரம் அடையாததற்கும், அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலில், தாமதமான தீவிர சூறவாளி புயல்களே முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

வரும், 20ம் தேதிக்கு பின் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் அமைதியாகும் போது, இந்திய பெருங்கடலில், வடகிழக்கு பருவமழை தீவிரமாவதற்கு சாதகமான காரணிகள் உருவாகும். இதனால், வரும், 25 முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



மிதமான மழை

வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன் அறிக்கை: மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல், தென்கிழக்கு அரபிக்கடல் வரை, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement