தேங்கி கிடந்த புகார்கள் மீது திடீர் வழக்கு பதிவு; மாவட்ட குற்றப்பிரிவில் பெண் உட்பட 8 பேர் அதிரடி கைது
கடலுார் ; கடலுார் மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணை நிலுவையில் இருந்தபுகார்கள் மீது ஒரே நாளில் வழக்குப் பதிந்து ஒரு பெண் உட்பட எட்டுகுற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கடலுார் மாவட்ட குற்றப்பிரிவில், விசாரணை நிலுவையில் இருந்த மோசடி தொடர்பான புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வழக்கு பதிந்து குற்றவாளிகளை கைது செய்ய எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.
அதன்படி, விசாரணை நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட புகார்கள் மீது கடந்த 13ம் தேதி ஒரே நாளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, உதயகுமார், வேலுமணி, அசோகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜவ்வாது உசேன், உலகநாதன். சங்கர், மணிகண்டன், ராஜாங்கம், கோபிநாத் ஆகியோர் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் குற்றவாளிகளை கைது செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, பண்ருட்டி அடுத்த காமாட்சி பேட்டையை சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் மற்றும் அவருடன் 3 பேரிடம், மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டியைச் சேர்ந்த குணசேரகன், 57; என்பவர் ஏமாற்றியுள்ளார். புகாரின்பேரில், வழக்கு பதிந்து குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, நெய்வேலி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர், அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜா என்பவரிடம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி வங்கி மூலம் 15 லட்சம் கடன் பெற்று அதில் 8.50 லட்சத்தை மோசடி செய்த மருங்கூரை சேர்ந்த அறிவழகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், நெய்வேலியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகளுக்கு மருத்துவ கல்லுாரியில் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.22.40 லட்சத்தை பெற்று ஏமாற்றிய, சென்னையைச் சேர்ந்த இருவர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருநாவலுாரைச் சேர்ந்த முத்துகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், முத்துகுமாரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற டிரைவர் பண்ருட்டி, மேல்மாம்பட்டை சேர்ந்த அண்ணாமலையிடம், அவருடன் டிரைவராக பணிபுரிந்து வரும் சி.என்., பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கிருபானந்தன், அவரது தம்பி ராஜா ஆகியோர் சேர்ந்து ராஜா திருப்பூரில் சர்வேயராக இருப்பதாகவும், அவர்மூலமாக அண்ணாமலைமகனுக்கு வி.ஏ.ஓ., வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7.95 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். இவ்வழக்கில், ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
மேலும், விருத்தாசலத்தில் தனியார் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் தீபாவளி சீட்டு மற்றும் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்த கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி வனிதா, விருத்தாசலம் தில்லை நகரைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோர்களிடம் சீட்டு கட்டிய ரூ.9.08 லட்சத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இது குறித்து பெண்ணாடத்தைச் சேர்ந்த அலி மனைவி மோத்திபீ மற்றும் அவருடன் சேர்ந்து 14 நபர்கள் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்து ஸ்டாலின், அவரது மனைவி வனிதா மற்றும் சக்திவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று திட்டக்குடி வதிஸ்டபுரத்தைச் சேர்ந்த தனியார் கிரெடிட் கேர் நெட்வொர்க் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்த பட்டூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் 450 வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமலும், ஒருசில வாடிக்கையாளரின் பெயரில் போலியாக நிறுவனத்தில் கடன் பெற்று ரூ.22.97 லட்சம் வரை கையாடல் செய்துள்ளார்.
இது குறித்து நிறுவன மேலாளர் ஆபிரகாம் டேனியல் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்து, தினேஷ்குமாரை கைது செய்தனர். இவர்கள் எட்டுபேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.