மன அழுத்தத்தை போக்க பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி
கம்பம்: கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் மன அழுத்தத்தை போக்க ஆசிரியர்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட்டன.
வகுப்புக்களில் கற்பித்தல் பணியில் மாணவ மாணவிகளை கட்டுப்படுத்துவதும், அவர்களின் மனங்களை ஒரு நிலைப்படுத்தி பாடங்களில் கவனம் செலுத்த வைப்பதும் இன்றைய சூழலில் சிரமமான காரியமாக உள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் ஆசிரியர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளது.
கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா, மூச்சுப் பயிற்சி தியானம் சொல்லி தரப்பட்டது. யோகா ஆசிரியர்கள் ராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அர்த்த சக்ராசனம், திரிகோணாசனம், உட்கட்டாசனம், வீரபத்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களும், பிராணாயாமம், தியான பயிற்சி குறிப்பாக நாத பிரம்ம தியான பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் காந்தவாசன், இணைச் செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.