சிவகங்கையில் டிச.,14 மாரத்தான் ஓட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிவகங்கை : போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் டிச.,14 அன்று சிவகங்கையில் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் மது, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் டிச., 14 அன்று காலை 5:30 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடைபெறும். இதில் பங்கேற்க வயது 14 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிலையம் மூலம் பதிவு செய்யலாம். வயது 18 முதல் 30க்குள் உள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம்.
ஆண், பெண்ணுக்கென தனித்தனியாக 5 கி.மீ., துாரம் மாரத்தான் ஓட்டம் நடக்கும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அடையாள அட்டை, மெயில் முகவரி தரவும்.
தன்னார்வலர்கள் வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மெயில் முகவரி தெரிவிக்க வேண்டும். மாரத்தான் ஓட்டம் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, இலந்தங்குடிபட்டி கண்மாய் வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் திரும்ப வேண்டும். முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பதக்கம், கேடயம், பாராட்டு சான்று வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்று வழங்கப்படும். மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயரினை https;//sivaganga.nic.in/ என்ற ஆன்லைன் போர்டலில் டிச., 12 மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றார்.