ரயில்வே சுரங்கப் பாலத்தில் தேங்கும் கசிவுநீரால் பாதிப்பு
ஆண்டிபட்டி : 'ஆண்டிபட்டி ஏத்தக்கோயில் ரோட்டில் ரயில்வே சுரங்க பாலத்தில் நீர் கசிவை தடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இப்பாலம் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
சிறு மழை பெய்தாலும் சுரங்க பாலத்தில் தேங்கும் நீரால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள், பொது மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் பெய்த பலத்த மழையால் சுரங்கப்பாலம் மூழ்கி 10 அடி வரை தேங்கிய நீரை மோட்டார் மூலம் கடத்த இரு நாட்கள் ஆகிவிட்டன. இதனால் பல கிராம மக்கள் சிரமத்தை சந்தித்தனர்.
தற்போது சுரங்கப் பாலம் அருகே உள்ள மேடான ஓடையில் தேங்கும் நீர் சுரங்கப் பாலத்தின் அடிப்பகுதியில் கசிந்து பாலத்தில் தேங்கி வருகிறது.
மோட்டார் மூலம் அப்புறப்படுத்தினாலும் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் தேங்குகிறது. தொடர்ந்து தேங்கும் நீரை கடந்து செல்லும் அப்பகுதி பொது மக்கள், பள்ளி மாணவிகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது.
பாலத்தில் நீர் கசிவை தடுக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.