தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க ரேஷன் பொருட்கள் கையிருப்பு உள்ளது; மாவட்ட வழங்கல் துறை அலுவலர் தகவல்

மூணாறு : 'மூணாறு பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இம்மாதம் ரேஷன் பொருட்கள் வழங்க கையிருப்பு உள்ளது.' என, மாவட்ட வழங்கல்துறை அலுவலர் பைஜூ கே.பாலன் தெரிவித்தார்.

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் 114 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் அடிமாலியில் உள்ள பொது வினியோகத்துறை கோடவுனில் இருந்து கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப் படுகின்றன. பொருட்கள் கொண்டு வரும் லாரிகளுக்கு கட்டணத் தொகை கடந்த மூன்று மாதங்களாக முடங்கியதால், லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதனால் கோடவுனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை பொது வினியோகத்துறை அமைச்சர் அனிலின் கவனத்திற்கு சென்றதால் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

அது தொடர்பாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரி பைஜூ கே.பாலன் கூறியதாவது: மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட், மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றிற்கு இம்மாதம் (நவம்பர்) ரேஷன் பொருட்கள் வழங்க கையிருப்பு உள்ளன. அவர்களுக்கு புழுங்கல் அரிசி தவிர பச்சை அரிசி, மட்டை அரிசி வழக்கம் போல் வழங்கப்படும்., என்றார்.

எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் புழுங்கல் அரிசியை பயன்படுத்துவது வழக்கம். புழுங்கல் அரிசி இருப்பு இல்லாததால் தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து வெளி மார்க்கெட்டில் அரிசி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement