பள்ளி வளாகத்தில் காடுகள்; பசுமை சூழலில் மாணவர்கள் விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி அசத்தல்
பெருகி வரும் தொழிற்சாலைகள், வாகனங்களால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சுத்தமான காற்று அடர்ந்த காடுகளில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளி வளாகத்தையே அடர்ந்து காடாக மாற்றி அசத்தி வருகின்றனர் விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.
ஆலைகள் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கிறது. வெப்பமயமாததால் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் உயர்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டு எப்போது வெயில் காலத்தில், மழைக்காலத்தில் சராசரியை விட அதிகனமழை பெய்து பேரிடர் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் வனப்பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தொழிற்சாலை வளாகத்தில் அதிகப்படியான மரங்களை வளர்த்தல், அதன் அருகே உள்ள பகுதிகளில் கூடுதல் மரங்களை தங்கள் சொந்த செலவில் நட்டு பராமரித்து வளர்த்தல் போன்ற கட்டுப்பாடுகளை விதித்து மரங்கள் வளர்த்தலை ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் விருதுநகரில் 135 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் சென்றால் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும். அந்த அளவிற்கு பள்ளி துவங்கிய காலத்தில் ஊர் பெரியவர்களின் முயற்சியால் வைக்கப்பட்ட மரங்களை தற்போது பராமரித்து வருகின்றனர். இங்கு ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு சுற்றுச்சூழல் தினத்தன்றும் பலவகையான மரங்களை நடுகின்றனர். இந்த நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதால் மரங்களை நிறைந்த பகுதியாக உள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் வேப்பமரம், அரசமரம், மா, தென்னை, தேக்கு, நவாப்பழம் மரம், வாகை, புங்கை, திருவோடு மரம், செம்பருத்தி, வாழை உள்பட பல வகையிலான 300க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது.
பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் நட்டு வைத்து பல ஆண்டுகளாக பராமரித்து வருவதால் அடர்ந்து காடு போன்று உள்ளது. இதனால் மாணவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறது. மேலும் காலையில் மைதானத்திற்கு நடைப்பயிற்சி செய்வதற்காக அதிக அளவிலான மக்கள் வந்து செல்கின்றனர். கல்வியுடன், இயற்கையை பேணி பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்து மாணவர்களும் ஆர்வமாக கற்று வருகின்றனர்.
- எஸ்.முருகேசன், தலைமையாசிரியர், கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்.
ஒவ்வொரு சுற்றுச்சூழல் தினத்திலும் அனைத்து வகையான மரக்கன்றுகளையும் நட்டு வளர்ப்பதால் மாணவர்கள் இயற்கையை புரிந்து சூழலுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை வாழ உதவி புரிகிறது. வருங்கால சந்ததியினருக்கு இயற்கையை பற்றிய புரிதல் ஏற்படுவதற்கு ஏற்றதாக உள்ளது.
- வினோத்பால்ராஜ், பிளஸ் 2, கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்.