விவசாயிகள் மகிழ்ச்சி
மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் செல்வதால், பாசன வசதி பெறும் விவசாயிகள், கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் நகராட்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், மூல வைகையில் உருவாகும் வைகை ஆறு ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கப்பட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய தேவைக்கும், குடிநீர் திட்டங்களுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் தேனி,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அனைத்து கிராம கால்வாய்களிலும் தண்ணீர் சென்றதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மதுரை, அருப்புக்கோட்டை, திருப்புவனம், கடலாடி, சாயல்குடி, மானாமதுரை, சிவகங்கை உட்பட 172 கூட்டு குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், தடையின்றி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நவ.9ம் தேதி அணையின் நீர்மட்டம் 65 அடியாக இருந்ததை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு ராமநாதபுரத்தை சென்றடைந்தது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதினால் வைகை பூர்வீக பாசன விவசாயத்திற்கும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தொடர்ந்து தண்ணீர் கிடைத்து வருவதால், மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.