பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு
சிவகங்கை ; தினமலர் செய்தி எதிரொலியால் சிவகங்கை மாவட்டத்தில் நெல் நடவு செய்த விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்ய நவ.,30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் மானாவாரி, கண்மாய், கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். இந்த நெற்பயிருக்கு காப்பீடு செய்ய, சிவகங்கைக்கு பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அடங்கல் பெற்று ஆன்லைனில் பிரீமிய தொகையை கட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஏக்கருக்கு ரூ.451.80 பிரீமிய தொகை செலுத்தினால், ஏக்கருக்கு ரூ.30,120 வரை இழப்பீடு வழங்கப்படும்.
பிரீமிய தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி நவ., 15 என அறிவித்திருந்தனர். தொடர்ந்து தீபாவளி, ஆயுதபூஜை விடுமுறையால் விவசாயிகள் பிரீமிய தொகையை செலுத்த முடியவில்லை.
இதனால், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என வி.ஏ.ஓ., சங்கம் மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவ.,30 என அறிவிக்கப்பட்டுள்ளது.