உலக கேரம் சாம்பியன் காசிமா; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

5

சென்னை : அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை கேரம் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த காஷிமா, 17, மூன்று பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.


இவர், புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள். தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என மூன்று பிரிவுகளிலும், இவர் வெற்றி பெற்றுள்ளர். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி:



அமெரிக்காவில் நடந்த, 6வது உலக கோப்பை கேரம் போட்டியில், சென்னையை சேர்ந்த, நம் தமிழ் மகள், காஷிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்கு பாராட்டுக்கள். பெருமை கொள்கிறேன் மகளே. எளியோரின் வெற்றியில் தான் அரசின் வெற்றி அடங்கி இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காசிமாவின் தந்தையும், கேரம் பயிற்சியாளருமான மாபூ பாஷா, 54 கூறியதாவது:

கேரம் பயிற்சியாளரான நான், 17 வயதில் இருந்தே சிறுவர்களுக்கு கேரம் கற்று தருகிறேன். என் மகள் காசிமா, 8 வயதில் இருந்து கேரம் பயிற்சி பெற்று வருகிறார்.

உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், மூன்று பதக்கங்களை காசிமா வென்றது பெருமையாக உள்ளது. எனக்கும், என் பகுதி மக்களுக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். கடவுளுக்கு நன்றி.

போட்டியில் பங்கேற்க, 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவிய, துணை முதல்வர் உதயநிதிக்கும் நன்றி. வரும் 21ம் தேதி பிற்பகல் 12:00 மணியளவில், அமெரிக்காவில் இருந்து பதக்கத்தோடு காசிமா, சென்னை திரும்ப உள்ளார்.

தண்டையார்பேட்டை, செரியன் நகர், 2வது தெருவில் உள்ள தனியார் மையத்தில், கூலி தொழிலாளர்கள், மீனவர்களின் குழந்தைகள், 45க்கும் மேற்பட்டோருக்கு, கேரம் கற்று தருகிறேன்.

இங்கு, தேசியளவில் வெற்றி பெற்ற, 14 வீரர்கள் உள்ளனர். நான் பயிற்சி அளித்து வரும் கேரம் மையத்திற்கு, அரசு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால், மேலும் அதிக கேரம் வீரர்கள் நாட்டிற்கு கிடைப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement