தமிழகத்தில் விடாமல் வெளுத்து வாங்கும் தொடர் கனமழை; தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. தஞ்சாவூரில் இன்று (நவ.,18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வளி மண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில், பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 17.5 செ.மீட்டரும், கோடியக்கரையில் 13.4 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்த நிலையில், அதிகபட்சமாக, திருத்துறைப்பூண்டியில் 2 மணி நேரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவானது. தஞ்சாவூரில் கன மழையால், பட்டுக்கோட்டை மணிகூண்டு, தலைமை தபால் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தஞ்சாவூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு இன்று (நவ.,18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 'மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம்' என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.