சட்டசபை, எம்.பி., தேர்தல் செலவின தொகை இழுபறி: வி.ஏ.ஓ.,க்கள் புகார்  

சிவகங்கை: சட்டசபை, எம்.பி., தேர்தல் பூத் செலவின தொகை வழங்காமல் இழுபறி செய்வதாக வி.ஏ.ஓ.,க்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதியின் கீழ் 1,357 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.


கடந்த சட்டசபை மற்றும் எம்.பி., தேர்தல் நாளான்று வாக்காளர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அமர்ந்து ஓட்டுப்பதிவை நடத்த தேவையான டேபிள், சேர், குடிநீர், பந்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் செய்திருந்தனர். இதற்காக தேர்தல் கமிஷன் ஒரு ஓட்டுச்சாவடிக்கு ரூ.1,300 வீதம் வழங்கும்.

ஆனால், இம்மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவன்று ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதி செய்த வி.ஏ.ஓ.,க்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடிக்கு ரூ.1,300 வழங்க வேண்டும். ஆனால், ரூ.650 மட்டுமே வழங்கி, எஞ்சிய ரூ.650 வழங்கப்படவில்லை.


அதே போன்று நடந்து முடிந்த எம்.பி., தேர்தலன்றும் ஓட்டுச்சாவடிக்கு வழங்க வேண்டிய ரூ.1,300 ல், திருப்புத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வி.ஏ.ஓ.,க்களுக்கு மட்டுமே ஒரு ஓட்டுச்சாவடிக்கு ரூ.650 வீதம் வழங்கியுள்ளனர்.


மற்ற 3 தொகுதியில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.,க்களுக்கு ரூ.1,300 யை இது வரை வழங்கவில்லை. மாவட்ட தேர்தல் நிர்வாகம் தேர்தலன்று ஓட்டுச்சாவடியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய வி.ஏ.ஓ.,க் களுக்கு வழங்க வேண்டிய செலவின தொகையை விடுவிக்க வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement