கனிம வளத்துறை பறக்கும் படை நடவடிக்கை: அனுமதி பாஸ் இல்லாமல் சென்ற 4 லாரிகள் பறிமுதல்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் இருந்தும் தென்காசி மாவட்டம் கடையம் ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் இருந்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெருமளவு கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அளவுக்கு அதிகமான பாரத்துடனும், டிரான்ஸ்சிட் பாஸ் எனப்படும் கொண்டு செல்வதற்கான அனுமதி ரசீது இல்லாமல் செல்வது என விதிமுறை மீறல்கள் தொடர்ந்து நடந்தன. அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலியான ஹாலோகிராம் முத்திரையுடன் அதிகாரிகளின் சீல் வைத்து போலியான அனுமதி ரசீது தயாரித்து கடத்தல் நடந்தது. இது குறித்து செய்திகள் வெளியாயின. இதைத் தொடர்ந்துபுவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இதற்காக தனியே பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த புவியியல் அதிகாரிகள் இந்த அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
கடந்த 2 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில் திருநெல்வேலி கங்கைகொண்டானில் அனுமதியின்றி ஜல்லி எடுத்துச் சென்ற இரண்டு டின் 74 ஏஎம் 6556, டிஎன் 69 கே 3737 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரெட்டியார்பட்டி பகுதியில் கொண்டு சென்ற ஒரு லாரியை டிஎன் 72 டிய் 1931 பறிமுதல் செய்து பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வலியாற்றுமுகம் பகுதியில் அனுமதி இன்றி கனிம வளம் ஏற்றி சென்ற ஒரு லாரியை கனிம வளத்துடன் பறிமுதல் செய்து கொற்றிக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக அதிகாரிகள் கனிம வள லாரிகளை சோதனையிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உயர் அதிகாரிகளுக்கு பிடிபட்ட வாகனங்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என உத்தரவு உள்ளதால் கடும் கண்காணிப்பு உள்ளது. இதனால் மூன்று மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக அனுமதி இன்றி கனிம வளம் ஏற்றுச் செல்லும் லாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இன்னும் சில தினங்களுக்கு இத்தகைய கண்காணிப்பு தொடர்ந்தால் அனுமதியின்றி கனிம வளம் கடத்தும் லாரிகளின் எண்ணிக்கை முற்றிலும் தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.