சென்னையில் டிராபிக் நெருக்கடிக்கு புது தீர்வு! இடம் மாறும் பஸ் நிறுத்தங்கள்
சென்னை; சென்னையில் 100க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களை இடம் மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து நெருக்கடி இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாது ஒன்று. அதிலும் தலைநகர் சென்னையை பற்றி சொல்லவே வேண்டாம் என்று சொல்லலாம். எப்போது சாலைகளில் டிராபிக் ஜாம் ஆகும் என்றே சொல்ல முடியாது.
மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி. முக்கிய சாலைகள் மட்டும் அல்லாமல் குறுக்கு சாலைகளிலும் வாகனங்கள் குறுக்கும், மறுக்கும் கடப்பதை எளிதாக காணலாம். வெளியூர் செல்ல பஸ், ரயில் பயணங்களை தொடங்கும் முன்பும் இதே நெருக்கடி நிலைமைதான்.
வழக்கமான நாட்களை தவிர்த்து, வார இறுதி நாட்கள், பண்டிகை தினங்களுக்கு முன்பும், பின்னரும் சென்னையின் வாகன நெரிசலால் அவஸ்தைபடாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக மாநகர பஸ்கள் நெரிசலில் சிக்கி தவிப்பது அன்றாட நிகழ்வே என்று சொல்லலாம்.
இனி இதுபோன்ற நெருக்கடிகளுக்கு தீர்வு காண பஸ் நிறுத்தங்களை இடம் மாற்றும் நடவடிக்கையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு எடுத்து, அது தொடர்பான ஆய்வையும் நடத்தி முடித்துள்ளது. குறிப்பாக சிக்னல், உயர்மட்ட மேம்பாலங்கள் அருகே உள்ள சாலைகளில் செல்லும் போதும் காணப்படும் வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. ஆய்வில் சிக்னல், மேம்பாலங்கள் இருக்கும் இடங்களில் 100 மீட்டர் தொலைவில் பஸ் நிறுத்தங்களை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, முதல்கட்டமாக பாரிமுனை-முகப்பேர், வடபழனி-தரமணி வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றப்படும் என்று தெரிகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து, சென்னையின் பல இடங்களில் விரைவில் பஸ் நிறுத்தங்கள் மாற்றப்பட உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.