கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் 'ஹாட்ரிக்' தோல்வி
ஹோபர்ட்: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.
ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என ஏற்கனவே தொடரை வென்றது. ஹோபர்ட் நகரில் 3வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம் (41), ஹசீபுல்லா கான் (24) நம்பிக்கை தந்தனர். கேப்டன் சல்மான் ஆகா (1), இர்பான் கான் (10) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 117 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஆரோன் ஹார்டி 3, ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் பிரேசர்-மெக்குர்க் (18), கேப்டன் ஜோஷ் இங்லிஸ் (27) கைகொடுத்தனர். ஸ்டாய்னிஸ் அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் (61), டிம் டேவிட் (7) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஸ்டாய்னிஸ் வென்றார்.
சர்வதேச 'டி-20' அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக வெற்றி (7) பெற்ற அணியானது ஆஸ்திரேலியா. இதற்கு முன் நியூசிலாந்து 6, இலங்கை, இங்கிலாந்து அணிகள் தலா 5ல் வெற்றி பெற்றிருந்தன.