பத்திரிகையில் செய்தி வந்தால்தான் வேலை நடக்குது! மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை
திருவொற்றியூர், ''பத்திரிகைகளில் செய்தி வந்தால் மட்டுமே வேலை நடக்கிறது,'' என, திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் வேதனை தெரிவித்தார்.
திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில், நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் புருஷோத்தமன், செயற்பொறியாளர்கள் சகுபர் உசேன், பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட, 54 தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்து பேசினர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது :
மேடான பகுதிகளுக்கு குடிநீர் ஏறுவதில் சிக்கல் உள்ளது. மழைநீர் வடிகால் பணியின்போது சேதமாகும் சுவர்களுக்கு, தனியார் ஒப்பந்த நிறுவனம், செங்கல், 20 கிலோ சிமென்ட் வழங்குகிறது. ஆளுக்கான கூலியை யார் வழங்குவது. ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணலி விரைவு சாலை, முருகப்பா நகர் - சத்தியமூர்த்தி நகர் வரை, 3 கி.மீ., துாரத்திற்கு எங்கும் கிராசிங் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சடையங்குப்பம் மேம்பாலத்தில், மின்விளக்கு அமைக்க பலமுறை கோரினேன். ஆனால், பத்திரிகைகளில் செய்தி வெளியானதும், சோலார் மின் விளக்கு பொருத்தப்படுகிறது. கவுன்சிலர் வார்த்தைக்கு மரியாதையே கிடையாது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
ஜெயராமன், 4வது வார்டு: மா.கம்யூ., கவுன்சிலர்: வார்டு அலுவலகம், சத்தியமூர்த்தி நகரில் வேண்டாம். 80 சதவீதம் பகுதிகளில், மணலி விரைவு சாலைக்கு மறுபக்கம் உள்ளதால், மக்கள் சிரமமடைவர். அம்பேத்கர் நகர் - சண்முகபுரம் வரை, குட்டையில் கோரை புல் வளர்ந்துள்ளது. அவற்றை அகற்றி புனரமைக்க வேண்டும்.
வார்டு முழுதும், பல இடத்தில் மின்கம்பங்கள் பழுதாகி உள்ளன. அதை சீரமைக்க வேண்டும். விடுபட்ட இடங்களில், மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
திரவியம், 6வது வார்டு காங்., கவுன்சிலர்: வார்டு முழுதும், 75 சாலைகள் பழுதடைந்துள்ளன. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். சார்லஸ் நகரில், பாதாள சாக்கடை திட்டம் எப்போது வரும்.
கார்த்திக், 7வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்: வெற்றி விநாயகர் நகர் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது மருத்துவ கழிவு இல்லை என்று, மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எந்த கழிவாக இருந்தாலும், மழைகாலத்தில் பிரச்னை ஏற்படும்.
துாய்மை பணி மேற்கொள்ளும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம். தெருக்களில் குப்பை சேகரிக்க ஆட்கள் கிடையாது. பேசின்சாலையோரம், ஆர்.கே. நகரின் குப்பையை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
திருவொற்றியூர் ஏழாவது வார்டு குப்பை கிடங்காகி வருகிறது. கார்கில் நகரில் ஒருவாரமாக குடிநீர் வரவில்லை. அதற்கு பதில் சொல்ல அதிகாரியும் இங்கு வரவில்லை.
மக்கள் தொகை அதிகரித்துள்ளது. எனவே, 350 துாய்மை பணியாளர்களை அதிகரிக்க வேண்டும் என, கேட்டிருக்கிறோம். 13, 14, 4, 7 ஆகிய வார்டுகளில், குடிநீர் பிரச்னை உள்ளதால், வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்ப் ஹவுஸ் கண்காணிப்பு பணிகளில், 60 வயது முதிர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, 6,000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. விசாரித்து, தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் - கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து, 6ம் தேதிக்குள் கூடத்திற்கான திட்ட விபரம் வழங்கினால்தான், 10ம் தேதி கூட்டம் நடத்த முடியும்.- தனியரசு, தி.மு.க., மண்டல குழு தலைவர், திருவொற்றியூர்.