கைகொடுக்குமா கோலி ராசி * கவாஸ்கர் எதிர்பார்ப்பு
புதுடில்லி: ''நியூசிலாந்து தொடரில் ஏமாற்றிய கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்படுவார்,'' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 'சீனியர்' வீரர் கோலி 36. சமீபத்திய போட்டிகளில் ரன் சேர்க்க தடுமாறுகிறார். டெஸ்டில் தனது, கடைசி 70 இன்னிங்சில் 2 சதம், 11 அரைசதம் மட்டும் அடித்தார். 2024ல் இவரது டெஸ்ட் சராசரி 22.72 ஆக குறைந்து விட்டது. கடந்த நியூசிலாந்து தொடரில் 3 டெஸ்டில் 93 ரன் தான் எடுத்தார்.
இருப்பினும் ஆஸ்திரேலிய மண்ணில் கோலியின் டெஸ்ட் சராசரி 54.08 ரன். இங்கு இவரது பேட்டிங் எழுச்சி பெறலாம். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் 75, கூறியது:
ஆஸ்திரேலிய மண்ணில் ரன் எடுக்கும் வேட்கையில் உள்ளார் கோலி. ஏனெனில் சொந்தமண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. தற்போது முதல் இரு டெஸ்ட் நடக்கவுள்ள பெர்த், அடிலெய்டு என இரு மைதானமும் கோலிக்கு ராசியானவை. இவரது சிறந்த டெஸ்ட் சதத்தில் ஒன்றாக பெர்த் (2018ல் 123 ரன்) உள்ளது.
அடிலெய்டிலும் (2012ல் 116, 22, 2014ல் 115, 141, 2018ல் 3, 34, 2020ல் 74, 4) சீரான பேட்டிங் வெளிப்படுத்தியுள்ளார். இம்மைதானம் குறித்து கோலிக்கு நன்கு தெரியும்.
கடந்த 2020ல் இந்தியா இங்கு இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்னுக்கு சுருண்டது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் கோலி 74 ரன் எடுத்துள்ளார்.
இந்த இரு மைதானத்தில் கோலி சிறப்பாக செயல்பட்டால், அவருக்கு கூடுதல் தன்னம்பிக்கை கிடைத்துவிடும். இதற்கு சற்று அதிர்ஷ்டமும் வேண்டும். ஒருவேளை கோலிக்கு நல்ல துவக்கம் கிடைத்து விட்டால், மீண்டும் தனது அசத்தலை ஆஸ்திரேலியாவில் தொடர்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
காத்திருக்கும் திட்டம்
இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,'' கோலி மனநிலையை ஆஸ்திரேலிய பவுலர்கள் சோதிப்பர். சமீபகாலமாக ஸ்டம்சை விட்டு விலகிச் செல்லும் பந்துகளை கோலி, அடிக்காமல் விட்டு விடுகிறார். ஒருவேளை இந்த பந்துகளை அடிக்க முற்பட்டால், ஹேசல்வுட் போன்ற பவுலர்கள், 'மிடில் ஸ்டம்சை' தகர்ப்பது போல பந்து வீசலாம். தவிர, நியூசிலாந்து பவுலர்கள் செய்ததைப் போல, கோலி உடலை தாக்கும் வகையில் பவுலிங் செய்து மிரட்டலாம். இதை கோலி தெரிந்து வைத்திருப்பார்,'' என்றார்.