அங்கன்வாடி மையம் சேதம் புதிதாக அமைக்க வலியுறுத்தல்
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வது வார்டில் மேட்டு கிராமம் உள்ளது. இப்பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது.
அங்கன்வாடி மையக் கட்டடத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வந்தனர்.
தற்போது, சில ஆண்டுகளாக, கட்டடத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து, பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு பழமையானதால், கடந்த இரண்டு ஆண்டாக கைவிடப்பட்டுள்ளது.
தற்போது, தற்காலிகமாக மாற்று கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்காலிக இடத்தில் போதிய அளவு இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அதிக அளவில் செல்வதில்லை.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையக் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.