மஹா., ஜார்க்கண்டில் ஓய்ந்தது பிரசாரம் காங்., மெத்தனத்தால் கூட்டணியில் அதிருப்தி

மும்பை, நவ. 19-

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மிகவும் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக, 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளன.

மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது.

போட்டி வேட்பாளர்கள்



மஹாயுதி கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவு அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி களத்தில் உள்ளது.

சிவசேனா மற்றும் தேசியவாத காங்., பிளவுக்கு பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை இந்த தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. அதனால், வழக்கத்தை விட அதிகமாக தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

பா.ஜ., 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், தேசியவாத காங்., 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மகாவிகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களிலும், சிவசேனா உத்தவ் பிரிவு 95 இடங்களிலும், தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளன.

மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 4,136 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் சீட் மறுக்கப்பட்டவர்கள், 150 தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக உள்ளனர்.

கடந்த 2019ல் 8.94 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 9.63 கோடியாக உயர்ந்துள்ளது. ஓட்டுப்பதிவுக்காக, ஒரு லட்சத்து 186 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.

ஆறு லட்சம் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஜார்க்கண்ட் தேர்தல்



முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ள ஜார்க்கண்டில் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள, 38 இடங்களுக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது.

வரும், 23ம் தேதி, மஹாராஷ்டிராவுடன் இணைந்து, ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்டவை அடங்கிய, இண்டி கூட்டணிக்கும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்வு பெற்ற நிலையில், இண்டி கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவர்கள், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

பிரசாரத்தில் மிகவும் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் நடந்ததாக, காங்., மீது குற்றஞ்சாட்டிஉள்ளனர்.

Advertisement