ரேஷன் மோசடிகளால் அரசுக்கு ரூ.69,000 கோடி!இழப்பு 2,000 கோடி கிலோ அரிசி, கோதுமை மாயம்

2


புதுடில்லி : ரேஷன் எனப்படும் பொது வினியோக முறையின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு அனுப்பும் 2,000 கோடி கிலோ அரிசி மற்றும் கோதுமை, பயனாளிகளை சென்றடைவதில்லை. இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 69,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.



உலக அளவில் மிகப்பெரிய ரேஷன் முறை நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன் வாயிலாக, 81.4 கோடி மக்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன.

ரேஷன் முறையில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக மாநில அரசுக்கு அனுப்பி வருகிறது.

ஆண்டுக்கு 5.24 கோடி டன் அரிசியும், 1.90 கோடி டன் கோதுமையும் இவ்வாறு அனுப்பப்படுகின்றன.

இவற்றில், 28 சதவீதம் அதாவது 2 கோடி டன், அதாவது 2,000 கோடி கிலோ அரிசி மற்றும் கோதுமை, பயனாளிகளை சென்றடைவதில்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

உணவு கழகம்



சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் பேராசிரியர் அசோக் குலாட்டி தலைமையிலான குழு, ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

கடந்த 2022 ஆக., முதல் 2023 ஜூலை வரையிலான ஓராண்டில், அரசு அனுப்பிய பொருட்கள் மற்றும் பயனாளிகள் பெற்ற பொருட்களின் அளவை ஒப்பிட்டு, இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

ரேஷன் வினியோகத்துக்காக மாநில அரசுகளுக்கு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை மத்திய அரசு அனுப்புகிறது.

இந்த ஆய்வு காலத்தில், 5.24 கோடி டன் அரிசி அனுப்பப்பட்டுள்ளது. அதில், 3.57 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு சென்றுள்ளது. அதாவது, 32 சதவீத அரிசி பயனாளிகளுக்கு செல்லவில்லை.

அதுபோல, 1.90 கோடி டன் கோதுமை அனுப்பப்பட்டதில், 1.6 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது. இதில், 15 சதவீதம் மடைமாற்றப்பட்டுள்ளது.

மூன்று இடங்கள்



ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு தானியங்களில், 28 சதவீதம், அரசிடமிருந்து பயனாளிகளுக்கு செல்லும் வழியில் பலரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாயமாகும் பொருட்கள், வெளிச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த ஒரு ஆண்டில் மட்டும், இந்த வகையில் மத்திய அரசுக்கு 69,109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, அந்த ஆண்டில் அரிசி மற்றும் கோதுமையின் விலை அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 2011 - 12ல், 46 சதவீதம் காணாமல் போன நிலையில், மத்திய அரசின் சில நடவடிக்கைகளால் அது குறைந்துள்ளது.

அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் குஜராத் ஆகியவையே, காணாமல் போகும் தானியங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. ரேஷன் முறை டிஜிட்டல் மயமாக்காதது இதற்கு காரணமாகும்.

ரேஷன் நடைமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், ரேஷன் பொருட்கள் மோசடி வெகுவாக குறைந்துள்ளது.

உதாரணத்துக்கு பீஹாரில், 2011 - 12ல் 68.7 சதவீதமாக இருந்த மோசடி, 2022 - 23ல் 19.2 சதவீதமாக குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில், 69.4 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், 33 சதவீத பொருட்கள் மடைமாற்றப்பட்டுள்ளன. மாயமாகும் பொருட்களின் எண்ணிக்கையில் பார்த்தால், உத்தர பிரதேசமே முதலிடத்தில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தீர்வு என்ன?

ரேஷன் பயனாளிகள் விபரங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டதால், மோசடிகள் பெருமளவு குறைந்துள்ளன. இருப்பினும், ஒட்டுமொத்தமாக 28 சதவீதம் அளவுக்கு காணாமல் போவது கவலைக்குரிய ஒன்றே.இதற்கு மாற்று வழிகளை மத்திய அரசு ஆராய வேண்டும். பயனாளிகளின் உண்மையான எண்ணிக்கையை கண்டுபிடிப்பது முக்கியம். ரேஷன் முறைகளில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும். உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதை விட, அதற்கு பதிலாக வங்கிக் கணக்கில் நேரடி பலன் மானியத்தை அளிப்பது போன்றவற்றை ஆலோசிக்கலாம்.

Advertisement