கிரேனில் சிக்கிய மெக்கானிக் பலி
கும்மிடிப்பூண்டி : செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில் வசித்தவர் துர்கா பிரசாத், 45. கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் 'சூரியதேவ்' இரும்பு உருக்கு தொழிற்சாலையில், மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மதியம் தொழிற்சாலை வளாகத்தில் பழுதாகி நின்ற கிரேன் ஒன்றை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அதனருகே, பொக்லைன் ஒன்று நின்று கொண்டிருந்தது.
கிரேன், கியரில் இருந்தது தெரியாமல், அதை கீழ் இருந்தபடி இயக்க முற்பட்டார். எதிர்பாராத விதமாக வேகமாக நகர்ந்த கிரேனுக்கும், பொக்லைனுக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதே தொழிற்சாலையில், கடந்த 10ம் தேதி கொதிகலன் வெடித்து, பணியில் இருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.