கலாசாரம், வரலாற்றுச் சான்றாக உள்ள பழங்கால கோயில்களை பாதுகாப்போம் நவ.19 -25 உலக மரபு வார விழா 

ராமநாதபுரம், நவ.19- இன்று (நவ.19) முதல் நவ.25 வரை உலக மரபு வாரவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பழங்கால வரலாற்றை பறைசாற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், அங்குள்ள கல்வெட்டுகளை பாதுகாக்க அனைவரும் உறுதியேற்போம்.

உலக பாரம்பரிய வாரம் ஆண்டு தோறும் நவ.19 முதல் 25 வரை கொண்டாப்படுகிறது. உலக பாரம்பரிய தலங்கள் என்பது கலாசாரம், வரலாறு, அறிவியல் அல்லது பிற முக்கியத்துவத்தை கொண்ட இடங்கள் அல்லது நினைவுச்சின்னங்களை கொண்டது. எனவே இந்த பொக்கிஷங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு நிலைத்திருப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. குறிப்பாக கோயில்கள் நம் பண்பாட்டின் அடையாளச் சின்னங்களாக திகழ்கிறது. அங்குள்ள கல்வெட்டுகள் பழங்கால மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, மன்னர்களின் ஆட்சி முறை ஆகியவற்றை நமக்கு எடுத்துரைக்கின்றன. ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது:

சொக்கநாதர் கோயில்கீழக்கரை



கீழக்கரை சொக்கநாதர் கோயில் கல்வெட்டுகளில் கீழக்கரை, அனுத்தொகை மங்கலம் என வழங்கப்பட்டுள்ளது. கி.பி.1531-ல் கீழக்கரையிலும் மற்றும் நாலு பட்டினத்தில் உள்ள பதினெண் விஷயத்தார் என்ற வணிகக்குழுவினர் ஒன்று கூடி முத்து விற்பவர்கள் நுாறு முத்துக்கு ஒரு குழி முத்து பிள்ளையார் பூஜைக்கு கொடுத்து வந்ததை மாற்றி நுாறு பணத்திற்கு அரைப்பணம் என முடிவு செய்துள்ளனர்.

1545--46-ம் ஆண்டில் கீழைக்கரையான நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் அச்சுதராய தும்முசி நாயக்கர், பதினெண் விஷயத்தார், மடிச்சீலை வரி (துணி வரி) அளிக்க வேண்டுமென்ற நியதியை ஏற்படுத்தி அவர்களுக்கு காவல் உரிமையையும், செட்டு என்ற மானியத்தையும் வழங்கியுள்ளார்.

இவ்வூரில் பதினெண் விஷயம் எனும் வணிகக்குழுவினர்16-ம் நுாற்றாண்டில் முத்து, மடிச்சீலை வணிகத்தில் ஈடுபட்டதை அறிய முடிகிறது.

கைலாசநாதர் கோயில்ஆர்.எஸ்.மங்கலம்



பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள கைலாசநாதர் கோயிலில் 'திருமடந்தையும் ஜயமடந்தையும்' எனத் தொடங்கும் சடையவர்மன் சீவல்லவன் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு கி.பி.1111-ல் வரியில்லா தேவதானம், பிரம்மதேயம் வழங்கப்பட்டதை சொல்கிறது.

இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் மங்கலம் எனப்பட்டன. அரசர்கள், வணிகர்கள் நான்கு வேதங்களைக் கற்றறிந்த பிராமணர்களுக்கு ஊர்களை கொடையாகத் தரும் போது தம் பெயருடன் “சதுர்வேதி மங்கலம்” என இணைத்துப் பெயர் சூட்டினர்.

மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன், ராஜசிம்ம மங்கலம் பேரேரியுடன் தன் பெயரில் ஊரையும் உருவாக்கி பிரம்மதேயமாக பிராமணர்களுக்கு வழங்கியதை சின்னமனுார் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. வரகுண வளநாடு எனும் நாட்டுப் பிரிவில் இருந்த இவ்வூரில் பாண்டியர் கால பெருமாள் கோயிலும் உள்ளது.

சிவன் கோயில், மாரியூர்



மாரியூர் சிவன் கோயிலில் இரு கல்வெட்டுகள் உள்ளன. 'பூமலற் திருவும்' மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் 2ம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1244) கல்வெட்டில் இவ்வூர் போர் வேட்கை பட்டினத்து நாற்பத்தெண்ணாயிரவனிதன் எனவும், இறைவன் திருபூவேந்திஸ்வரமுடையார் எனவும் அழைக்கப்படுகிறார்.

கோயில் சிவபிராமணர்க்கும், தேவகன்மிக்கும், இறைவனுக்கும் வேண்டிய நிவந்தங்களுக்கு ஏழூர் செம்பி நாட்டு சுரவனேரி என்ற ஊர் தானமாக வழங்கப்பட்டுள்ளது. கி.பி.16-17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சன்னதி கல்வெட்டில் இறைவன் பெயர் நயினார் பூவேந்திசுரமுடைய தம்பிரானார் எனவும், ஊர்ப் பெயர் சிந்தாமணி வளநாட்டு போர்க்கோலபட்டினம் எனவும் சொல்லப்படுகிறது.

இக்கோயில் சிரி ஆண்டார்க்கு தானத்தார்கள் ஏழாம் திருநாள் எழுபத்திரண்டு திருச்சாந்து சாத்துவதற்கு 300 பணம் தந்துள்ளனர்.

நாகநாதர் கோயில்நயினார்கோவில்



இங்குள்ள சிவன் கோயில் அடி முதல் சிகரம் வரை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட கற்றளிக்கோயில். கல்வெட்டுகளில் இவ்வூர், துகவூர் கூற்றத்து பெருமருதுார், தென்வல்லத்திருக்கை நாட்டு நெல்மலையான வீரபாண்டிய சதுர்வேதிமங்கலம் என பிற்கால பாண்டியர் காலத்திலும், மருதவனம் என்ற நயினார்கோவில் என சேதுபதி காலத்திலும் குறிப்பிடப்படுகிறது. இரு தளத்துடன் அமைந்த நாகர விமானமாக உள்ளது.

துாண்களில் சேதுபதி காலத்தைச் சேர்ந்த திருமாலின் ராம, வராக, மச்ச அவதார சிற்பங்கள் உள்ளன. கி.பி.1784-ல் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி காலத்தில் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

கல்வெட்டுகளில் இறைவன் பெயர் பாண்டியர் காலத்தில் திருநாகேஸ்வரம் உடையார் எனவும், சேதுபதி காலத்தில் நாகநாதசுவாமி எனவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு கோயில்களில் உள்ள சிற்பங்கள், கோபுரங்கள், கல்வெட்டுகள் நமது முன்னோர் வாழ்வியல் முறைகள், வீர, தீரம், கொடை வள்ளல்களை நமக்கு தெரிந்து கொள்ள உதவுகிறது. அவற்றை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுக்காக்க வேண்டும் என்றார்.

Advertisement