9 அரசு மருத்துவமனைகள் 58 ஆரம்ப சுகாதார நிலையங்கள் பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் இணைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கால் இழப்புகளை தடுக்க பாதம் பாதுகாப்போம் திட்டத்தில் 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, 58 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களில் தோல் நிறம், அமைப்பில் மாற்றம், சிவத்தல், கொப்புளங்கள், வெட்டுக்கள், வீக்கம், ஈரப்பதம், கசிவு வெளியேற்றம், துர்நாற்றம் இருப்பது, நரம்பு சேதத்தால் ஏற்படும் கால்களில் உணர்வு இழப்பு, கால்களில் கூச்ச உணர்வு, படபடப்பு வலி, எரிதல் உள்ளிட்ட பாதிப்புகளால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இவற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் கால் இழப்புகளை தடுக்க முடியும்.

இந்த பாதிப்புகள் உள்ளவர்களை மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் கண்டறிந்து அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைப்பார்கள். அங்குள்ள மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு ஆரம்ப கட்ட சிகிச்சை, தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். இப்படி பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது: மாவட்டத்தில் பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் 58 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தேவையற்ற கால் இழப்புகளை தடுத்து, சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்., என்றார்.

Advertisement