கோவை ஏர்போர்ட்டில் காங்., நிர்வாகிகள் 'ஆபாச வசைமாரி!' தேசிய பொதுச்செயலாளரை வழியனுப்ப வந்த இடத்தில் மோதல்

1

கோவை; அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வேணுகோபாலை வழியனுப்ப, கோவை விமான நிலையத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்குள் தடித்த வார்த்தைகளால் வாக்குவாதம் ஏற்பட்டதால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு கோஷ்டிகளையும் கட்சியினர் விலக்கி விட்டனர்.

கேரள மாநிலம் பாலக்காடு சென்றிருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வேணுகோபால், மும்பை செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையம் வந்தார். அவரை வழியனுப்ப, கோவையை சேர்ந்த காங்., நிர்வாகிகள் வந்திருந்தனர்.

கோவையில், காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், ஒருவர் நடத்தும் கூட்டத்துக்கு மற்றவர்கள் செல்வதில்லை. இச்சூழலில், வேணுகோபாலை சந்தித்தபோது, ஒருவரை பற்றி, ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவரை வழியனுப்பி விட்டு வெளியே வந்தபோது, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க மாநில பொது செயலாளரான செல்வத்தை, தேசிய செயலாளரான மயூரா ஜெயக்குமார் இடித்து தள்ளியுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தரம் தாழ்ந்த வார்த்தைகளை ஜெயக்குமார் உபயோகித்ததால், பதற்றமான சூழல் உருவானது. இருதரப்பிலும் ஆதரவாளர்கள் திரண்டதால், மோதிக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரையும் கட்சி நிர்வாகிகள் பிரித்து விலக்கி விட்டனர்.

கார் அருகே சென்ற ஜெயக்குமார், ஆக்ரோஷத்துடன் திரும்பி வந்து, 'அடிவாங்கியே வந்தவன் நான்...' என்றவாறு, தகாத வார்த்தைகளை உச்சரித்தார்.உடனே, செல்வம், ''என்னிடம் அடி வாங்கி விட்டு வந்தவன் தான்... நீ...'' என்றார்.

கோபமடையும் ஜெயக்குமார் மீண்டும் மோசமான வார்த்தைகளை பேசியதோடு, செல்வத்தை தாக்குவதற்கு பாய்கிறார். அவரை கட்சியினரும், விமான நிலைய பாதுகாப்பு படையினரும் தடுத்தனர்.

அப்போது, 'என்னைக்கும் இதே மாதிரி இருக்க மாட்டேன்...' என செல்வம் கூறியதற்கு, 'ஒன்னை ஒரு நாள் போடாமா விட மாட்டேன்...' என்ற ஜெயக்குமார், மீண்டும் கெட்ட வார்த்தைகளால் தொடர்ந்து திட்டினார்.

இப்பிரச்னை தொடர்பாக, செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, மாநில செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:

நான்கு ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சியில் மயூரா ஜெயக்குமார் பிரச்னை செய்து வருகிறார். 80 - 90 சதவீத கட்சியினர் ஒதுங்கி இருக்கின்றனர். சர்வாதிகாரமாக கட்சியை நடத்துகிறார்; கட்சியை அழித்துக் கொண்டிருக்கிறார் என்பது தொடர்பாக, கடந்த மாதம் காங்., நிர்வாகிகள் கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி, டில்லிக்கு அனுப்பினோம். அகில இந்திய தலைமை, மாநில தலைமை, மாநில பொறுப்பாளர் அஜய்குமாருக்கு தீர்மான நகல் அனுப்பினோம்.

மும்பை செல்வதற்காக கோவை வந்திருந்த அகில இந்திய பொது செயலாளர் வேணுகோபாலிடம், கோவை காங்கிரஸ் கமிட்டியில் உள்ள பிரச்னையை விளக்கினோம். அதற்கு, 'அஜய்குமாரிடம் சொல்லுங்கள்; அவர் எனக்கு பரிந்துரைப்பார். டில்லிக்கு வாருங்கள்' என, வேணுகோபால் கூறினார்.விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது, ஐ.என்.டி.யு.சி., நிர்வாகியான செல்வத்தை இடித்து தள்ளினார்.

ஒதுங்கிச் சென்றபோது, ஏன் தள்ளுகிறீர்கள் என கேட்டதற்கு, கடுமையான வார்த்தைகளால் திட்டினார். 'தன்னிடம் துப்பாக்கி இருக்கிறது; உங்களை அழித்து விடுவேன்' என ஜெயக்குமார் பேசினார். அவரால் கட்சியினருக்கு ஆபத்து இருப்பதால், துப்பாக்கி லைசென்சை ரத்து செய்ய வேண்டும். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

'வம்புக்கு இழுத்தார்கள்'

இதுதொடர்பாக, மயூரா ஜெயக்குமாரிடம் கேட்ட போது, ''விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, வேண்டுமென்றே என்னை தட்டி விட்டு வம்புக்கு இழுத்தார்கள். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது; அவ்வளவு தான்,'' என்றார்.



'தடித்த வார்த்தைகளால் வருத்தம்'

செல்வம் கூறுகையில், ''மயூரா ஜெயக்குமார் தேர்தலில் ஒவ்வொரு முறையும் தோல்வியடைவதால், அவரது விரக்திக்கு காரணமாக இருக்கிறது. என்ன பேசுகிறோம்; ஏது பேசுகிறோம் என தெரியாத சூழலில் உள்ளார். அவர் நடந்துகொண்ட விதம், செயல்பாடு, பேசிய தடித்த வார்த்தைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை சந்தித்து முறையிட இருக்கிறோம்,'' என்றார்.

Advertisement