ரெஸ்டோ பார்களால் பொது மக்கள் நிம்மதி இழப்பு அ.தி.மு.க., வையாபுரி மணிகண்டன் கடிதம்
புதுச்சேரி: சட்ட ஒழுங்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகை விடும் இருசக்கர வாகனத்தை கண்காணிக்க வேண்டும் என, டி.ஐ.ஜி.,க்கு அ.தி.மு.க., கடிதம் அனுப்பியுள்ளது.
அ.தி.மு.க., துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், டி.ஐ. ஜி.,க்கு அனுப்பியுள்ள கடிதம்:
புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து தொடர்பாக, போலீஸ் துறையின் நீண்ட அறிக்கையில், சுற்றுலா பயணிகளுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என உங்களுடைய உறுதிமொழி ஏற்புடையதாக இல்லை.
போக்குவரத்து போலீசார் சட்டம் ஒழுங்கு போலீசாரும், நகர பகுதியில் வாகனங்களை சோதனை செய்கின்றனர். அது தவறில்லை. ஆனால் வார இறுதி நாட்களில் வெள்ளி முதல் ஞாயிறு வரை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை.
வாகன சட்டப்படி, ஒரு வாகனத்தை வாடகைக்கு விடும் பட்சத்தில் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் 2000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சுற்றுலா பயணிகள் வார இறுதி நாட்களில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகின்றனர்.
இது தனி மனித சொந்த வாகன வெள்ளை நம்பர் பிளேட்டுகளுடன் உள்ளது. வெள்ளை நம்பர் பிளேட் உடைய வாகனத்தை வாடகைக்கு விடுவது சட்டப்படி குற்றமாகும். கலால் சட்டத்திற்கு விரோதமாக ரெஸ்டோ பார்கள் இரவு 3:00 மணி வரை திறந்துள்ளது.
இனால் சட்ட ஒழுங்கு ஏற்பட்டு மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
இவ்வாறு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.