பழைய ஏழாயிரம் பண்ணையில் ஓடையில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக் கேடு

சாத்துார்: சாத்துார் அருகே பழைய ஏழாயிரம் பண்ணையில் ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

பழைய ஏழாயிரம்பண்ணையில் இருந்து இ.மேட்டூர் கண்மாய்க்கு நீர் வரத்து செல்லும் ஓடையில் குப்பை கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் ஓடையில் கழிவுகள் குவிந்து மண் மேடாகி வருகிறது. ஏழாயிரம் பண்ணையில் பெய்து வரும் மழைநீரும் பழைய ஏழாயிரம் பண்ணையில் பெய்து வரும் மழை நீரும் இந்த ஓடை வழியாக இ.மேட்டூர் கண்மாயை சென்று அடையும்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த ஓடையில் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் ஓடை முழுவதும் மண் மேவி உள்ளது. இதன் காரணமாக பலத்த மழை பெய்து வரும் மழை நீர் முழுவதும் தற்போது சாத்துார் ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டில் ஆறாக பெருக்கெடுத்து ஓடி இ.மேட்டூர் கண்மாயை சென்றடைகிறது.

இதனால் மழைக்காலத்தில் இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பழைய ஏழாயிரம் பண்ணை ஓடை அருகில் காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகிலே ஓடையில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களும் அவதிப்படும் நிலை உள்ளது.

ஏழாயிரம்பண்ணை ஊராட்சி நிர்வாகம் ஓடையில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றுவதோடு மீண்டும் இங்கு குப்பை கழிவுகள் கொட்டாமல் தடுக்க வேண்டும்.

Advertisement