'மக்கள் கோவிலுக்கு வருவதை வழக்கமாக்க வேண்டும்'
வீரபாண்டி: ''மக்கள் அனைவரும் தவறாது கோவில்களுக்கு வருவதோடு, தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து, கோவிலுக்கு வருவதை வழக்கமாக்க வேண்டும்,'' என, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், பழமையான கோவில்களில் இருந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சேலம், உத்தமசோழபுரம் திருமணிமுத்தாற்றின் கரையில் அமைந்துள்ள, பழமையான பெரியநாயகி அம்மன் உடனுறை கரபுரநாதர் கோவிலுக்கு நேற்று காலை, 10:45 மணிக்கு பொன் மாணிக்கவேல் வந்தார். பக்தர்களோடு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார். பக்கத்தில் நின்ற சில பக்தர்கள், 'கோவில் கும்பாபி ேஷக பணிகளுக்காக, பாலாலயம் செய்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், பணிகள் முழுமையடையாமல் தாமதமாகிறது' என, புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பக்தர்களிடம் அவர் பேசுகையில்,''மிக பழமையான கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அதே வேளையில், பழமை மாறாமல் மராமத்து மற்றும் புதுப்பிக்கும் பணிகளை தொல்லியல்துறை மற்றும் கைதேர்ந்த ஸ்தபதிகளின் ஆலோசனைகளை கேட்டு பெற்று அதன்படி செய்ய வேண்டும். மக்கள் அனைவரும் தவறாது கோவில்களுக்கு வருவதோடு, தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து, கோவிலுக்கு வருவதை வழக்கமாக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் பழமையான கோவில்கள், பக்தர்கள் வராத நிலையில் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டு விடும்,'' என்றார்.